Thursday, April 25, 2013

லடாக்பகுதியில் இருந்து திரும்பிச் செல்ல முடியாது: முரண்டு பிடிக்கிறது சீனா!.



Thursday, April 25, 2013
புதுடில்லி::காஷ்மீரின் லடாக்கில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி 30 கி.மீ., தூரம் சீன ராணுவம் முன்னேறி வந்துள்ளது. படை திரும்பிச் செல்ல வேண்டும் என்ற, இந்தியாவின் எச்சரிக்கையை மீறி, சீன படை அங்கேயே "டேரா' போட்டுள்ளதால், பதட்டம் ஏற்பட்டுள்ளது.

கொடிக் கூட்டம் என்றால் என்ன:

 சீன ராணுவ ஊடுருவல் குறித்து, இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே 2 முறை நடத்தப்பட்ட கொடிக் கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. கொடிக் கூட்டம் என்பது, ஒரு நாட்டின் பகுதிக்குள், இன்னொரு நாடு ஊடுருவும் போது, பதட்டத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்படும் முதல் நடவடிக்கை. இருநாட்டு எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, இக்கூட்டம் நடக்கும். பிரச்னை சிறியதாக இருந்தால் பிரிகேடியர்கள் அளவிலும், பெரிதாக இருந்தால் கமாண்டர்கள் மட்டத்திலும் கூட்டம் நடக்கும். இக்கூட்டம் நடப்பதற்கு முன், இந்திய ராணுவம் சார்பில், "இது எங்கள் பகுதி, நீங்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறியுள்ளீர்கள். திரும்பி செல்லுங்கள் ' என்ற வாசகம் அடங்கிய பேனர் வைக்கப்படும். இந்த நடைமுறை, 2005ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது.

வரையறை இல்லை வரைமுறையும் இல்லை:
 
* 4057 கி.மீ., தூர எல்லைக்கட்டுப்பாட்டு கோடு (எல்.ஏ.சி) வரையறுக்கப்படாமல் உள்ளது. இந்த எல்.ஏ.சி., பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது.
* இந்த எல்.ஏ.சி., மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு பகுதியில் லடாக், மத்தியில் உத்தரகண்ட் மாநில எல்லை, கிழக்கு பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாசல மாநில எல்லைகள்.
* அக்சய் சின் பகுதி, காஷ்மீர் மாநிலத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது சீனாவால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர அருணாசலப்பிரதேசத்தின் ஒரு பகுதி, திபெத்துடன் சேர்ந்தது எனக்கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.....
 
 இந்திய பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது தொடர்பாக, இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, ஊடுருவிய படைகளை திரும்பப் பெற சீனா மறுத்து விட்டது. காஷ்மீர் மாநிலம் லடாக் பிராந்தியத்தில் தவுலத் பெக் ஆல்டி பகுதியில் கடந்த 15-ந் தேதி சீன ராணுவம் ஊடுருவியது. இந்திய பகுதிக்குள் 10 கி.மீ. தூரம் வரை வந்து விட்ட சீன படைகள், அங்கு கூடாரம் அமைத்து முகாமிட்டன. மேலும், சீன ஹெலிகாப்டர்களும் அங்கு பறந்து சென்றன. இதையடுத்து டெல்லியில், இந்தியாவுக்கான சீன தூதர் வெய் வெய்யை இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் நேரில் அழைத்து, இந்தியாவின் கவலைகளை தெரிவித்தார். இப்பிரச்சனையை தீர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
 
மேலும், மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர், சீன வெளியுறவு அமைச்சக இணை செயலாளரை தொடர்பு கொண்டு முறையிட்டார். இந்நிலையில், இப்பிரச்சினை தொடர்பாக, இந்திய-சீன ராணுவங்களின் பிரிகேடியர் அந்தஸ்திலான அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுசுல் செக்டாரில் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது. வாபஸ் பெற வலியுறுத்தல்: இந்திய தரப்புக்கு பிரிகேடியர் பி.எம்.குப்தாவும், சீன தரப்புக்கு சீனியர் கர்னல் அயன் யாந்தியும் தலைமை தாங்கினர். இந்த பேச்சுவார்த்தையின்போது, எல்லை கோடு பற்றிய உண்மை நிலவரங்கள், இருதரப்பிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. பேச்சுவார்த்தையின்போது, ஊடுருவிய இடத்தில் இருந்து சீன படைகளை திரும்ப பெறுமாறும், ஊடுருவலுக்கு முந்தைய நிலையை கடைபிடிக்குமாறும் இந்தியா வற்புறுத்தியது.
 
பதுங்கு அரண்களை இடிக்க வேண்டும்: ஆனால், அதை ஏற்க சீனா மறுத்து விட்டது. அந்த பகுதி, தங்களுக்கு சொந்தமானது என்றும், எனவே, ஊடுருவல் நடக்கவில்லை என்றும், திரும்பி செல்ல முடியாது என்றும் சீனா கூறியது. மேலும், புக்ட்சே என்ற இடத்தில், பதுங்கு அரண்களை இந்தியா கட்டியதற்கு சீனா ஆட்சேபணை தெரிவித்தது. அந்த அரண்களை இடித்து விடுமாறு கூறியது. தோல்வி: இந்த பேச்சுவார்த்தையில், சீனாவிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. இதனால், 3 மணி நேரமாக நடைபெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்தது. இதனால் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீன் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த பிரச்சனை, எல்லை கோடு தொடர்பான மாறுபட்ட புரிந்து கொள்ளல்களால் எழுந்துள்ளது. இருதரப்பு படைகள் இடையிலான நேருக்கு நேர் சூழ்நிலையாக இதை நாங்கள் பார்க்கிறோம். இருப்பினும், எல்லையில் அமைதி நிலவுகிறது.
 
தற்போது, இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதில், அமைதி தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம். இரு நாட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில், கடந்த காலங்களில் கூட இத்தகைய பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்த்துள்ளோம். ஏப்ரல் 15ம் தேதிக்கு முந்தைய நிலையை (படைகளை திரும்ப பெறுதல்) கடைபிடிக்குமாறு சீனாவிடம் வற்புறுத்தி உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment