Saturday, April 20, 2013

இந்து மதத்தை விமர்சித்ததாக கருணாநிதி மீது புகார்: ஆவணம் தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவு!

Saturday, April 20, 2013
சென்னை::தி.மு.க., தலைவர், கருணாநிதி மீது, பதிவு செய்யப்பட்ட புகார் தொடர்பான ஆவணங்களை, இம்மாதம், 23ம் தேதி தாக்கல் செய்யும்படி, அரசு வழக்கறிஞருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனுவுக்கு, தனிப்பட்ட முறையில், கருணாநிதிக்கு, "நோட்டீஸ்' அனுப்பவும், ஐகோர்ட் அனுமதித்துள்ளது.

சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த, வேத அறிவியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் கவுதமன் என்பவர், தாக்கல் செய்த மனு: கடந்த, 2002ம் ஆண்டு, அக்டோபரில், ஒரு பொதுக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர், கருணாநிதி பேசியதாக, பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதில், "இந்து என்றால் திருடன்' என, அர்த்தம் உள்ளதாக, அவர் கூறியுள்ளார். அவரது பேச்சு, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக இருந்தது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கும்படி, மாம்பலம் போலீஸ் நிலையத்தில், 2002ம் ஆண்டு, அக்டோபர், 25ம் தேதி, புகார் கொடுத்தேன். சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடமும் புகார் கொடுத்தேன். அந்த புகார்களின் மீது, எந்த நடவடிக்கையும் இல்லை. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இதையடுத்து, "எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்' என, ஐகோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 2006, ஜனவரி மாதம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதன்பின், எந்த நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து, தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி கிருபாகரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன் ஆஜரானார். போலீஸ் தரப்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகி, ""ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,'' என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். கருணாநிதிக்கு, தனிப்பட்ட முறையில், "கூரியர்' அல்லது விரைவு தபால் அல்லது தந்தி மூலம், மனுதாரர் நோட்டீஸ் அனுப்பி கொள்ளலாம் என, நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். கோப்பு, ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, இம்மாதம், 23ம் தேதிக்கு, நீதிபதி ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment