Thursday, April 11, 2013

தமிழ்நாடும் ஜெனீவாவும்; இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம்: இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் சிங்கள மக்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் அம்மாநிலத்திலுள்ள அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை!


Thursday, April 11, 2013
இலங்கை::இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் சிங்கள மக்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் அம்மாநிலத்திலுள்ள அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே நடைபெற்ற போரின் உச்சக் கட்டத்தின் போது தமிழ்நாட்டு தலைவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் அதற்கு சான்றாகும்.  

இலங்கையர்கள் கிரிக்கெட் விளையாடவாவது தமிழ்நாட்டுக்கு வர வேண்டாம் என்று கூறும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், எந்தவொரு போரின் போதும் சாதாரண மக்கள் கொல்லப்படுவதை தவிர்க்க முடியாது என்று 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி கூறியவர்.

தாமும் சளைத்தவரல்லர் என்பதைப் போல் எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் கருணாநிதியும் அதற்கு இரண்டு வாரங்கள் கழித்து 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி புலிகளைப் பற்றி தாம் இப்போது வெறுப்படைந்து இருப்பதாகவும் எப்போது புலிகள் பயங்கரவாதத்தை தழுவினார்களோ அப்போது தாம் அவர்களுடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதாகவும் கூறினார்.  

2009ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் வன்னி மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை பலர் இப்போது மறந்து இருக்கலாம். அப்போது அம்மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறியதோர் நிலப்பரப்பில் நாலாபக்கத்திலும் இருந்து வரும் ஷெல் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அப்போது மேற்கண்டவாறு பேசியவர்கள் இப்போது தமிழீழம் மலர வேண்டும் என்பதைப் போல் பேசும் போது அது சந்தர்ப்பவாதம் அல்லாமல் வேறென்ன? அவர்களது கூச்சல்கள் இலங்கை தமிழ் மக்களை மேலும் ஆபத்துக்கே தள்ளுகிறது.

ஆனால் அவர்களை குறை கூறிப் பயனில்லை. அவர்களுக்கு இவ்வாறு இலங்கை தமிழர்களின் அவலங்களை தமது வாக்கு வங்கிகளை பெருக்கிக்கொள்ள வாய்ப்பாக அமைத்துக் கொடுத்தவர்கள் இலங்கைத் தலைவர்களே. இலங்கை தலைவர்கள் குறைந்தபட்சம் போரின் பின்னாலாவது உலகை ஏமாற்றாமல் செயற்பட்டு இருந்தால் இந்த நிலைமை இந்தளவு மோசமாகியிருக்காது.

சர்வதேச அரங்கிலும் இலங்கை பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது. ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக இரண்டு வருடங்களாக இரண்டு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்க்காலத்தில் நிலைமை மேலும் மோசமாகும் அறிகுறிகளும் தென்படுகின்றன.

இந்தப் பிரேணைகளை முன்மொழிந்த அமெரிக்காவும் ஏனைய மேற்கத்திய நாடுகளும் வேறு பல நாடுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் அந்நாடுகளுக்கு மனித உரிமைகள் விடயத்தில் பேசுவதற்கு தார்மிக உரிமை இல்லை எனவும் இலங்கை அரசாங்கம் கூறுகிறது. அது உண்மை தான். ஆனால் இலங்கை உலக யதார்த்தத்தை எதிர்நோக்கியே ஆக வேண்டும்.

மேற்குலகுக்கு தார்மிக உரிமை இல்லை என்பதால் இலங்கை அரசாங்கம் செய்வதெல்லாம் சரியாகிவிடாது. அதேவேளை தார்மிக உரிமை இருக்கிறதோ இல்லையோ மேற்குலகம் இலங்கை போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கப் போவதில்லை. இந்த விடயத்திலும் குறைந்தபட்சம் போருக்கு பின்னாலாவது அரசாங்கம் உலகை ஏமாற்றாமல் இருந்து இருந்தால் தற்போதைய நிலைமை ஏற்பட்டு இருக்காது.

இலங்கை அரசாங்கம் என்ன தான் நன்மை செய்தாலும் தமிழ்நாட்டில் சந்தர்ப்பவாத அரசியல் இருக்கத்தான் செய்யும். ஆனால் இலங்கை அரசாங்கம் நாட்டில் தமிழ் மக்களுக்கு வழங்குவதாக தாமே கூறிய உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுத்து இருந்தால் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு இந்தளவு பிடி கிடைத்திருக்காது.

இலங்கை அரசாங்கம் எத்தனை முறை அதிகார பரவலாக்கல் முறையை சீர்படுத்துவதாக இந்திய அரசாங்கத்திடம் வாக்குறுதியளித்துள்ளது? போர் நடந்து கொண்டு இருக்கும் காலத்தில் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாம் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கும் அப்பால் சென்று அதிகாரத்தை தமிழ் மக்களுக்கு பரவலாக்க நடவடிக்கை எடுப்பதாக ஹிந்து பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் என்.ராமிடம் கூறியிருந்தார்.

அதே காலத்தில் அவர் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக சர்வகட்சி மாநாடொன்றை கூட்டினார். இந்த சர்வகட்சி மாநாடு பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவின் தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவொன்றை  நியமித்தது. இந்தக் குழு நீண்ட காலமாக விவாதித்து அதிகார பரவலாக்கல் விடயத்தில் அறிக்கையொன்றை தயாரித்து 2010ஆம் ஆண்டு ஜனாதிபதியிடம் கையளித்தது. இந்த அறிக்கையிலும் அதிகார பரவலாக்கல் முறையை மேலும் சீர் செய்வது தொடர்பாக பல ஆலோசனைகள் இருந்தன.

ஆனால் இலங்கை அரசாங்கம் இந்த விடயங்களில் நேர்மையாக செயற்படுகிறதா என்று சந்தேகிக்கக் கூடிய வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றன. போர் முடிவடைந்ததன் பின்னரும், அதாவது 2010ஆம் ஆண்;டு தாம் 13ஆவது அரசியலமைப்பிற்கு அப்பால் செல்லத் தயார் என்று ஜனாதிபதி மற்றுமொரு முறை கூறியிருந்தார்.

ஆனால் போர் முடிவடைந்த உடன் அரசாங்கத்தில் இருந்த விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்ற சில அமைச்சர்கள் போர் முடிவடைந்துவிட்டதனால் இனி அதிகார பரவலாக்கல் தேவையில்லை என்று கூச்சலிட ஆரம்பித்தனர். அரசாங்கமும் அவர்களது கூச்சலுக்கு இடம் கொடுத்துவிட்டு பார்த்துக் கொண்டு இருந்தது.

2011 ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் செய்தார். தாம் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அப்பால் செல்லும் தீர்வொன்றை காண தாம் தயாராக இருப்பதாக அவர் கூறியதாகவும் கிருஷ்ணா ஊடகவியலாளர்களிடம் கூறினார். ஆனால் கிருஷ்ணா நாடு திரும்பிய உடன் தாம் அவ்வாறு கூறவில்லை என்று ஜனாதிபதி பத்திரிகை ஆசிரியர்களுடனான கூட்டமொன்றில் உரையாற்றும் போது கூறினார்.

பல லட்சக் கணக்கு ரூபா செலவழித்து நூற்றுக்கு மேற்பட்ட கூட்டஙகளை நடத்தி தயாரிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது என்று எவருக்கும் தெரியாது. அக்குழுவிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் வித்தாரணவும் இப்போது அதைப் பற்றி பேசுவதேயில்லை.

இவற்றினால் இந்திய அரசாங்கம் வெகுவாக ஏமாற்றமடைந்திருக்கிறது என்பது உண்மை. இலங்கை பிரச்சினையை தமிழ்நாட்டுத் தலைவர்கள் அரசியலுக்காக பாவிக்கிரார்கள் என்பது இந்திய மத்திய அரசாங்கத்திற்குத் தெரியும். ஆனால் தமிழ்நாட்டுத் தலைவர்கள் மாநிலத்தின் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டால் அது மாநிலத்தல் கொந்தளிப்பான நிலைமை ஏற்படும். அதேபோல் அது இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைதன்மையையும் பாதிக்கும். எனவே இலங்கையில் தமிழ் அலசியலுக்குள் அமைதியிருப்பதை இந்திய அரசாங்கம் விரும்புகிறது.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகள் இந்திய அரசாங்கத்தை சினங் கொள்ளச் செய்யும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. அதேவேளை அது அரசியலுக்காக தீனி தேடும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் வாய்ப்பாகிவிடுவதை தவிர்க்க முடியாது.

அதிகார பரவலாக்கலைப் பற்றி அரசாங்கம் தாம் கூறியதை அவ்வாறே செயலில் காட்டாவிட்டாலும் குறைந்தபட்சம் வட மாகாண சபைக்கான தேர்தலையாவது நடத்தியிருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஏனெனில் அந்த மாகாணத்தில் இப்போதைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

அவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண ஆட்சியில் இருந்தால் வட பகுதி மக்களின் பிரச்சினைகள் தீர்வது எவ்வாறாயினும் அங்கு நிலைமையைப் பற்றி இந்திய தலைவர்களும் தமிழ்நாட்டு தலைவர்களும் இதைவிட திருப்தியடைந்து இருப்பார்கள். அவ்வாறாயின் தமிழ்நாட்டின் நிலைமை இந்தளவு மோசமாக இருக்கும் என்று கூற முடியாது.

சர்வதேச ரீதியாகவும் அரசாங்கம் பிரச்சினைகளை விலைக்கு வாங்கிக் கொள்கிறது. போர் முடிவடைந்து ஓரிரு நாட்களில்; இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி முனோடு 2009ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி வெளியிட்ட கூட்டறிக்கையில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய கட்டமைப்பொன்றை உருவாக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.

அது நடைபெறவில்லை. எனவே 2010ஆம் ஆண்டு முன்னாள் இந்தோனேசிய சட்ட மா அதிபர் மர்சூகி தருஸ்மான் தலைமையில் குழுவொன்றை அமைத்த ஐ.நா இலங்கை விடயத்தில் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. அரசாங்கமும் முண்டியடித்துக் கொண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது.

அதன் அமைப்பில் குறை கண்டாலும் அதன் அறிக்கை வெளியான உடன் அமெரிக்கா சரி, அதையாவது செய்து காட்டு என்று அரசாங்கத்திற்கு வாய்ப்பளிக்கும் வகையில் கடந்த வருடம் மனித உரிமை பேரவையில் பிரேரணையொன்றை சமர்ப்பித்தது. ஆனால் அரசாங்கம் அதன் படியாவது நடந்து கொள்ளவில்லை. எனவே தான் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை செய்ய நேரிடும் என்ற எச்சரிக்கஇயுடன் இவ்வருடம் மனித உரிமை பேரவையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

எனவே அரசாங்கம் விரும்பியிருந்தால் தமிழ்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் இலங்கைக்கு எதிராக உருவாகியிருக்கும் நிலைமைகளை ஓரளவிற்காவது தவிர்த்துக் கொண்டிருக்கலாம் என்பது புலனாகிறது. இப்போது காணப்படுவது அரசாங்கம் தாமே தேடிக்கொண்ட வினையாகும்.   

No comments:

Post a Comment