இந்த வீடுகள் அனைத்தும் இராணுவத்தைச் சேர்ந்த படையினரால் தான் நிர்மாணிக்கப்பட்டன. இப்போது இந்த ஒவ்வொரு வீட்டின் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபாவாக இருக்கின்றது.
Monday, April 29, 2013
இலங்கை::கிளிநொச்சியில் இராணுவத்தினர் மக்களை வாழ வைக்கிறார்கள்
இலங்கை::கிளிநொச்சியில் இராணுவத்தினர் மக்களை வாழ வைக்கிறார்கள்
தேசத்துரோக சக்திகளின் போலிப் பிரசாரம் மக்கள் மனதில் எடுபடவில்லை!
எஸ். தில்லைநாதன்...-
ஜெனீவாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் அமெரிக்காவின் அனுசரணையுடன் அரசசார்பற்ற அமைப்புகளும் சில புலம் பெயர்ந்த தமிழர்களின் அமைப்புகளும் இலங்கைக்கு எதிராக ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும் வதந்திகளையும் பரப்பி, எமது நாட்டுக்கு சர்வதேச சமூகத்தின் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கு இப்போது முயற்சிகளை மேற்கொள்கின்றன.
அரசாங்கமும் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் முகமாக யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த சுமார் மூன்று இலட்சம் பேருக்கு செய்து வரும் புனர்வாழ்வு, மீள்வாழ்வு திட்டங்கள் குறித்து உலக நாடுகளுக்கு சரியான முறையில் எடுத்துக் காட்டுவதுமில்லை. இதற்கான பொறுப்பை நாம் விரும்பியோ, விரும்பாமலோ வெளிவிவகார அமைச்சின் மீதுதான் சுமத்த வேண்டும்.
யுத்தம் முடிவடைந்த இறுதி நாட்களில் ஆயுதப்படையினர் குறிப்பாக இராணுவம் மக்களை மிலேச்சத்தனமாக தாக்கி கொடுமைப்படுத்தியதுடன், எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் என்று தாங்கள் சந்தேகிப்பவர்களை ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றதாக சனல் 4 தொலைக்காட்சி சேவையிலும் வேறு பல இணையத் தளங்களிலும் போலிப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவற்றுக்கு பதிலளிக்கும் முகமாக இராணுவம் யுத்தத்தின் கடைசி நாட்களிலும் அதற்கு பின்னரும் பொதுமக்களுக்கு செய்த மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து நேரில் கேட்டறிவதற்காக நான் கிளிநொச்சிக்கு சென்று கிளிநொச்சியிலுள்ள பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவை சந்தித்தேன். அவருடன் நான் நிகழ்த்திய பேட்டியை கீழே தருகின்றேன்.
கேள்வி: யுத்தம் முடிவடைந்தவுடன் இராணுவம் எவ்விதம் செயற்பட்டது என்பதை விளக்கிக் கூற முடியுமா?
ஜெனரல்:
யுத்தம் முடிவடைந்தவுடன் சுமார் இரண்டு இலட்சத்து 93 ஆயிரம் பேர் யுத்தம் நடந்து கொண்டிருந்த எல்.ரி.ரி.ஈ.யின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிக்கு பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வந்து சேர்ந்தார்கள்.
இவ்வளவு பெருந்தொகை மக்களுக்கு பணிவிடை செய்வது இலகுவான செயலாக இருக்கவில்லை. சொற்ப நேரம் நாம் மலைத்துபோய் விட்டோம். உடனடியாக எங்களிடம் இருந்த வளங்களைப் பயன்படுத்தி அந்த மக்களை காப்பாற்றி ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்தோம். ஆரம்பத்தில் அங்கு வசதிகள் சற்று குறைவாக இருந்தாலும், நாம் அவர்களுக்கு எங்களாலான சகல வதிகளையும் செய்து கொடுத்ததுடன், மூன்று வேளை உணவையும் சுத்தமான குடிநீரையும் சுகாதார வசதிகளையும் செய்து கொடுத்தோம்.
கேள்வி: இவ்விதம் யுத்தத்தினால் பல மாதங்களாக பாதிப்பிற்குள்ளான இந்த மக்கள் இராணுவத்தரப்புக்கு வந்து சேர்ந்த போது அவர்களின் மன நிலை எவ்விதம் இருந்தது என்பது பற்றி கூற முடியுமா?
ஜெனரல்: அவர்கள் எல்லோரும் மனம் உடைந்த நிலையில் தங்கள் வாழ்க்கையே சூனியமாகிவிட்டது என்பது போன்று மன அழுத்தங்களினால் செய்வதறியாது வேதனைப்பட்டுக் கொண்டிருந்ததை நாம் அவதானித்தோம். இந்த மக்களின் மன அழுத்தங்களை போக்குவதற்கு அவர்களுக்கு முதலில் ஒரு வகையான புனர்வாழ்வுத்திட்டம் அவசியமானதுடன், மன உளைச்சலை நீக்குவதற்கான ஆலோசனைகளை அமைதியாக பெற்றுக் கொடுப்பது அவசியமாகியது. அந்தப் பணியையும் நாம் செய்து முடித்த பின்னர் இடம்பெயர்ந்த மக்களின் முகத்தில் மகிழ்ச்சி களைகட்டத் துவங்கியது. அதற்கு பின்னர் இராணுவத்தினரை பார்த்து இவர்கள் எங்களுடைய எதிரிகள் என்ற மனோபாவத்துடன் ஒதுங்கிக் கொண்டிருந்த மக்கள் எமது இராணுவ வீரர்களுடன், வீராங்கணைகளுடன் நட்புறவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள்.
கேள்வி: அது சரி. உங்களிடம் வந்து சேர்ந்த மக்களில் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களும் இருந்தார்களா? அதைப்பற்றி சற்று விளக்கிக் கூறுங்கள்?
ஜெனரல்:
இராணுவத்தரப்புக்கு வந்த மக்களுடன் சுமார் 12ஆயிரம் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களும் வந்தார்கள். அவர்களில் பெரும்பகுதியினர் எங்களிடம் வந்து சரணடைந்தார்கள். இன்னுமொரு பகுதியினரை நாம் கைது செய்தோம். இவ்விதம் எங்களிடம் வந்து சேர்ந்த 12 ஆயிரம் முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளித்தோம்.
பின்னர் அவர்களுக்கு பல்வேறு தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு உதவிகளை செய்து கொடுத்தோம். இறுதியில் முற்றாக புனர்வாழ்வு பெற்ற அனைவரையும் ஜனநாயக நீரோட்டத்தில் சங்கமிப்பதற்கு நாம் இடமளித்து, அனைவரையும் விடுதலை செய்தோம்.
இப்போது நாம் இந்த 12 ஆயிரம் பேரில் ஒருவரை கூட முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் என்று அழைப்பதில்லை. அவர்களுக்கு நாம் பொது மன்னிப்பு அளித்திருப்பதனால், அவர்களின் கடந்தகால நிகழ்வுகளை மறந்து அவர்களையும் சாதாரண மனிதர்களாகவே மரியாதையுடன் நடத்துகிறோம்.
கேள்வி: நீங்கள் ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் இப்போது இராணுவத்தினருடன் நட்புறவை கொண்டுள்ளார்கள் என்று கூறினீர்கள். இது எவ்விதம் சாத்தியமானது?
ஜெனரல்: யுத்தத்தின் போது எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களால் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. அவர்கள் எல்.ரி.ரி.ஈ.யின் கட்டுப்பாட்டில் இருந்த போது மக்கள் அடிமைகளைப் போல் இருந்தார்கள். எந்தவொரு விடயம் குறித்தும் மக்களுக்கு தங்கள் அதிருப்தியை தெரிவிப்பதற்கு எல்.ரி.ரி.ஈ. வாய்ப்பளிக்கவில்லை.
இன்று நாங்கள் எல்.ரி.ரி.ஈ.யின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டோம் என்றும் தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர். எங்களுடைய அபிலாஷைகளை அரசியல் விருப்பு, வெறுப்புகளை எல்.ரி.ரி.ஈ. இயக்கம் துவம்சம் செய்த பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் பூர்த்தி செய்து மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளையும், உரிமைகளையும் அரசாங்கத்துடன் பேசி பெற்றுக் கொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள்.
எல்.ரி.ரி.ஈ. அதிகாரத்தில் இருந்த போது அவ்வியக்கத்திற்கு பயந்து தலையாட்டி பொம்மைகளாக இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எல்.ரி.ரி.ஈ. அடக்கி, ஒடுக்கப்பட்ட பின்னர் தங்களுடைய உண்மை நிலையை வெளிப்படுத்தி மக்களுக்காக பாடுபடுவார்கள் என்று மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், எல்.ரி.ரி.ஈ.யின் அதே போக்கையே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் கடைப்பிடித்து அரசாங்கத்துடன் சுமுகமாக பேசி உரிமைகளை பெறுவதற்கு பதிலாக முரண்பாட்டுக் கொள்கையை கடைப்பிடிப்பதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் மக்கள் வெறுக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் இராணுவத்தினரை முன்பு தாங்கள் எதிரிகளாக பார்த்து, பயந்து, பதுங்கிக் கொண்டிருந்த போதிலும் அவர்களுடன் நெருக்கமாக பழகும் போது இராணுவத்தினர் தமிழர்களின் எதிரிகள் அல்லர். தமிழர்களுக்கு உதவி செய்ய வந்தவர்கள் என்ற உணர்வு இப்போது தமிழ் மக்கள் மனதில் வலுவூன்றியிருக்கிறது.
கேள்வி: இப்போது சுதந்திர மனிதர்களாக கிளிநொச்சியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இராணுவம் எந்த வகையில் உதவி செய்கிறது? சற்று விளக்கிக் கூற முடியுமா?
ஜெனரல்:
நாம் முதன் முதலில் தமிழர்கள் எமது எதிரிகள் அல்லர் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக கிளிநொச்சியில் உள்ள எல்.ரி.ரி.ஈ.யின் முன்னாள் அங்கத்தவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களில் இருந்து 100 இளம் பெண்களை இராணுவ தொண்டர் படையில் இணைத்துக் கொண்டோம். இராணுவத்தில் சேர்ந்து கொள்வதற்கு இளம் பெண்களுக்கு வெற்றிடங்கள் இருக்கின்றன என்று நாம் விளம்பரப்படுத்திய போது, சுமார் 500 இளம் பெண்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பம் செய்தார்கள்.
இவர்களில் இருந்து நாம் அவர்களின் கல்வி, குடும்பத்தின் கஷ்ட நிலை, அறிவுத்திறன் போன்றவற்றை மதிப்பீடு செய்து கிளிநொச்சியில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 100 இளம் பெண்களை இராணுவ வீராங்கனைகளாக தொண்டர் படையில் சேர்த்துக் கொண்டோம்.
கேள்வி: இவர்களுடைய சம்பளம் போன்ற விபரங்களை எடுத்துரைக்க முடியுமா?
ஜெனரல்:
ஆம், இவ்விதம் இராணுவ தொண்டர் படையில் சேர்ந்து கொள்ளும் பெண்கள் 15 ஆண்டு காலம் இராணுவத்தில் பணிபுரிந்த பின்னர் ஓய்வு பெறலாம். ஓய்வு பெறும் இவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும். தற்போது அவர்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூடியதாக 32,000 ரூபா மாத சம்பளம் கொடுக்கப்படுகிறது. அத்துடன் இந்த ஒவ்வொரு பெண் இராணுவ வீராங்கனைக்கும் 18,000 ரூபா பெறுமதியான மூன்று வேளை உணவு, தங்குமிட வசதி, சீருடை மற்றும் வைத்திய வசதிகளும் மேலதிகமாக வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு இராணுவத்தின் உத்தரவாதத்தின் பெயரில் தவணை முறையில் திருப்பிச் செலுத்தக்கூடிய வங்கி இலகு கடன் திட்டத்தின் கீழ் மோட்டார் சைக்கிள்களையும் வாங்கிக் கொடுப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏற்கனவே, சுமார் 20 முதல் 25 இளம் பெண்கள் இந்த சலுகைக் கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வாங்கியிருக்கிறார்கள்.
கிளிநொச்சியில் இராணுவத்தினர் மக்களை வாழ வைக்கிறார்கள்
வறுமைக் கோட்டிலிருக்கும் தமிழ் யுவதிகள் 100 பேர் இராணுவ வீராங்கனைகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்
கேள்வி : இராணுவம் இவர்களுக்கு வேறு ஏதாவது உதவிகளை செய்கிறதா?
ஜெனரல்:
ஆம். நிச்சயமாக. நாம் இந்த 100 பெண் இராணுவ வீராங்கனைகளில் இருந்து மிகவும் வறுமை நிலையில் குடியிருப்பதற்குக்கூட வீடு இல்லாமல் கஷ்டப்படும் 20 பேரை தெரிவு செய்து அவர்களுக்கு இராணுவத்தைச் சேர்ந்த சக ஊழியர்கள் தாங்களே விரும்பி கொடுத்த பணத்தை வைத்து 5இலட்சம் ரூபா செலவில் அழகான வீடொன்றை அந்த வீட்டின் அளவிலான வீட்டுத் தோட்டத்துடன் அமைத்துள்ளோம். இந்த வீடுகள் அடுத்த ஒரு சில வாரங்களில் இவர்களுக்கு கையளிக்கப்படும்.
கேள்வி: நீங்கள் பொதுமக்களுக்கு இவ்விதம் உதவிகளை செய்கிaர்களா?
ஜெனரல்:
ஆம். நாம் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரே ஒரு மாவட்டமான கிளிநொச்சியைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு பல் வகையிலும் உதவி செய்து வருகின்றோம். இப்பிரதேசத்தில் உள்ள ஏழைப் பிள்ளைகளுக்கு இராணுவ வீரர்களே விரும்பி கொடுக்கும் பணத்தை வைத்து 5ம் தரத்தில் இருந்து பல்கலைக்கழகம் செல்லும் வரையில் வருடாந்த புலமைப் பரிசில் திட்டமொன்றை 148 மாணவ, மாணவியருக்கு நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
வருடத்திற்கு இரண்டாயிரமாக ஆரம்பிக்கும் இந்த புலமைப்பரிசில் கொடுப்பனவு வகுப்புகள் உயர, உயர 10 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்படுகிறது.
ஜெனரல் அவர்களே, இந்தத் தகவல்களை எனக்கு மனமுவந்து கொடுத்தமைக்காக நான் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன். நான் இராணுவத்தின் பெண்கள் படையணியின் தளபதி மேஜர் சியாமின் பெரேராவை சந்தித்து பேசினேன்.
1995ம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்து கொண்ட திருமதி ஷாமின் பெரேராவின் கணவரும் ஒரு இராணுவ அதிகாரியாவார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் 6வது இராணுவ மகளிர் படையணியின் தளபதியாக இருக்கிறார்.
தனக்கு கீழ் இப்போது சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள 100 இராணுவ பெண் வீராங்கனைகள் அனைவருமே கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஏழ்மை நிலை காரணமாகவே இராணுவத்தில் எவ்வித அச்சமும் இன்றி இணைந்து கொண்டு இன்று இப்பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக் கொடுப்பதற்கான பயிற்சியை பெற்று வருகிறார்கள் என்று கூறினார்.
இந்தப் பெண்கள் 18 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்களில் சிலருக்கு ஆங்கில அறிவும் உண்டு. சிங்களம் அந்தளவுக்கு பேச முடியாதிருந்தாலும், அவர்கள் இப்போது எங்களுடன் சேர்ந்து ஆர்வத்துடன் சிங்களத்தை கற்றுக் கொள்கிறார்கள் என்று அந்தப் பெண் இராணுவ அதிகாரி தெரிவித்தார்.
இவர்கள் 100 பேரும் இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்ட பின்னர் சிவிலியன் பணிகளிலேயே இராணுவ சீருடை அணிந்து ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு சமூகவியல், அழகியற்கலை, வீட்டுத்தோட்டம், கணனி பயன்படுத்துதல், சுகாதாரவியல் போன்ற பிரிவுகளில் விசேட பயிற்சி அளிக்கப்படுகின்றன.
இவர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்திலும் ஆஸ்பத்திரிகளிலும் வைத்தியத் தாதிமார் தொடர்பான பயற்சிகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. கைப்பணிகளை தயாரித்தல், தையல் தொழில், சப்பாத்து தயாரித்தல், புத்தகங்களை பைன்ட் செய்தல் போன்ற பல்வேறு தொழிற்துறைகளிலும் பயிற்சியளிக்கப்படுகின்றன.
இவ்விதம் பல்வேறு தகவல்களை எமக்கு தெரிவித்த மேஜர் ஷாமின் பெரேரா, இந்த பெண் இராணுவ வீராங்கனைகள் 30 நாட்களுக்கு தொடர்ந்தும் பணி புரிந்த பின்னர் 10 நாட்களுக்கு விடுமுறை கொடுக்கப்படும். அந்த நாட்களில் அவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு சென்றுவர முடியும் என்று கூறினார்.
இதையடுத்து மேஜர் ஷாமின் பெரேராவின் அனுமதியுடன் நான் இந்த 100 பேரில் சிறந்த இராணுவ வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட பரந்தனைச் சேர்ந்த 19 வயது நாகேந்திரன் சுபாஷினியைச் சந்தித்தேன். அவருடன் இராணுவத்தினர் தங்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் வீடுகளை அன்பளிப்பாக பெறவுள்ள வட்டக்கச்சியைச் சேர்ந்த 20 வயது சிந்துஜா, முருகண்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் பிரேமகாந்தி, வட்டக்கச்சியைச் சேர்ந்த 23 வயது லீலாவதி, 24 வயது சந்திரபால உமா பாலந்தினி, பரமந்தனாரைச் சேர்ந்த 22 வயது இராமன் ப்ரியா, மற்றும் 20 வயது பெருமாள் இராஜேஷ்வரி ஆகியோரையும் சந்தித்து பேசினேன்.
சந்திரபால உமா பாலந்தினி என்ற பெண் இராணுவ வீராங்கனையின் தகப்பனார் சிங்களவராவார். இவரது தாய் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் பெண் ஆவார். நாம் யுத்தத்தின் போது தெய்வாதீனமாக உயிர் தப்பி இராணுவத்தரப்புக்கு வந்து சேர்ந்தோம் என்று அவர்கள் அனைவரும் கூறினார்கள்.
நீங்கள் இராணுவத்தைப் பற்றி என்ன நினைக்கிaர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கு, அனைவரும் ஏகோபித்தமாக நாம் முன்னர் இராணுவத்தைப் பார்த்தால் அவர்களை எங்கள் எதிரிகளாக பார்த்து நடுநடுங்கினோம். ஆனால், இன்று அவர்கள் யார் என்பது எங்களுக்கு புரிந்துவிட்டது.
நாம் மட்டுமல்ல கிளிநொச்சியையும், வடபகுதியையும் சார்ந்த அனைத்து மக்களும் இன்று ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையில் மகிழ்ச்சியுடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் தங்கள் சுயநல நோக்கத்திற்காக இந்த அமைதியை சீர்குலைத்து எங்களுக்கு மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டுமென்பதே எமது விருப்பமாகும்.
எனது இந்த கிளிநொச்சிக்கான உத்தியோகபூர்வ விஜயம் பூரண வெற்றியளிப்பதற்கு கிளிநொச்சி பாதுகாப்புப்படை மூலஸ்தானத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் அஜித் விக்கிரமசேகர பலவகையிலும் எனக்கு உதவி செய்தார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
No comments:
Post a Comment