Monday, April 8, 2013

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 80 மீனவர்களை விடுதலை செய்ய வற்புறுத்தி, ராமேசுவரத்தில் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

Monday, April 08, 2013
ராமேசுவரம்::இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 80 மீனவர்களை விடுதலை செய்ய வற்புறுத்தி, ராமேசுவரத்தில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித் துள்ளனர். மேலும் 12-ந்தேதி பாம்பன் பாலத்தில் ரெயில் மற்றும் பஸ் மறியலில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சிங்கள கடற்படை அட்டூழியம் தமிழக மீனவர்கள், நடுக்கடலில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினர் வந்து தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனை கண்டித்து பல அரசியல் கட்சிகள், போராட்டங்கள் நடத்தியும், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பலன் மட்டும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டும் வருகின்றனர். ராமநாதபுரத்தை சேர்ந்த 19 மீனவர்கள், கடந்த மாதம் 15-ந்தேதி சிறை பிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

15 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த போராட்டம், கலெக்டரின் உறுதி மொழியை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கடலுக்கு சென்ற 2-வது நாளே, மீண்டும் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டது, ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடுக்கடலில் மீன் பிடித்த 30 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் சிறை பிடித்த சிங்கள கடற்படை, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது. இதே நாளில் காரைக்காலை சேர்ந்த 26 மீனவர்களையும் சிங்கள கடற்படை சிறைபிடித்து, தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவங்களை தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ராமேசுவரத்தில் மீனவர்கள் சங்க அவசரக்கூட்டம் நடைபெற்றது. மீனவர்கள் சங்க தலைவர் போஸ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மீனவர்கள் விடுதலைக்காக இன்று முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

தற்போது சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மற்றும் காரைக்காலைச்சேர்ந்த 56 மீனவர்கள், ஏற்கனவே இலங்கை சிறையில் இருக்கும் ராமேசுவரத்தை சேர்ந்த 19 மீனவர்கள், தங்கச்சி மடத்தை சேர்ந்த 5 மீனவர்கள் ஆகியோரது விடுதலைக்கு மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கோரிக்கையை வற்புறுத்தி, வருகிற 12-ந்தேதி அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக பாம்பன் ரெயில் மற்றும் சாலை பாலங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் துறைமுக கடல் பகுதியில் அனைத்து விசைப்படகுகளும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.


tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment