Monday, April 8, 2013

புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் தஞ்சம்!

Monday, April 08, 2013
இலங்கை::புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் தஞ்சம் வழங்கியுள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகனே இந்த தகவலை தங்களுக்கு தந்ததாக பிபிசி செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணைந்த இளந்திரையன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தமக்குத் தெரியாது என இளந்திரையன் குடும்பத்தார் தன்னிடம் கூறியதாக லோகினி மேலும் தெரிவித்துள்ளார்;.
அந்தச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

துபாயில் ஐ.நா அகதிகள் உதவியமைப்பின் (யு என் எச் சி ஆர்) பொறுப்பில் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களில் லோகினியும் ஒருவராவார்.

அவுஸ்திரேலியா செல்லும் வழியில் படகு பழுதடைந்த வேளையில் ஐ.நா அகதிகள் உதவி அமைப்பை தொடர்புகொண்டபோது, சிங்கப்பூரில் இருந்து துபாய் செல்லும் ஒரு கப்பலால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சிங்கப்பூர் கடற்படையால் காப்பாற்றப்பட்டு துபாயில் தற்போது யு என் எச் சி ஆர் பொறுப்பில் இருக்கும் 19 இலங்கைத் தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமைகள் அமைப்பு சனியன்று கோரியிருந்த நிலையிலேயே லோகினி ரதிமோகன் தமிழோசையிடம் பேசினார்.

விடுதலைப் புலிகள் நடத்திவந்த தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக தான் பணியாற்றி வந்தவரென்றும், யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் தான் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.தனது கணவர் இந்தியாவில் இருந்துவருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பிழைக்க வழியில்லை என்பதாலும், எப்போது வேண்டுமானாலும் தாங்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிடலாம் என்பதாலும் அங்கிருந்து கிளம்பி அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றதாக அவர் கூறினார்.
தான் வந்த படகில் இருந்த 46 பேரில் 39 பேரை அகதிகளாக யு என் எச் சி ஆர் அங்கீகரித்தது என்றும், ஏனையோர் 7 பேர் இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டார்கள் என்றும் லோகினி சொன்னார்.

அகதியாக அங்கீகரிக்கப்பட்டவர்களில் பாதியளவானோருக்கு அமெரிக்கவும் சுவீடனும் அடைக்கலம் அளித்துள்ளது ஆனால் எஞ்சியுள்ள 19 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்ப முயற்சிகள் நடப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு தான் திருப்பி அனுப்பப்பட்டால், அங்கு தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என தான் அஞ்சுவதாக லோகினி கூறினார்.இலங்கையில் வாழும் தமது குடும்பத்தாரும் தன்னை வர வேண்டாம் என்று அறிவுறுத்துவதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment