Thursday, April 18, 2013

அமெரிக்க உரத் தொழிற்சாலை வெடி விபத்தில் 70 பேர் பலி!




Thursday, April 18, 2013
டெக்காஸ்::அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடந்த மாரத்தான் போட்டியில் குண்டுகள் வெடித்ததில் 3 பேர் பலியானார்கள். 150-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

அந்த பயங்கரத்தின் பதற்றமும், பரபரப்பும் ஓயும் முன்பே அமெரிக்காவில் மீண்டும் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது. டெக்காஸ் மாகாணத்தில் உள்ள உரத்தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்து சுமார் 70 பேரை பலி வாங்கி விட்டது. இதுபற்றிய விபரம் வருமாறு:-

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வாகோ நகரின் புறநகரில் மிகப்பெரிய உரத்தொழிற்சாலை உள்ளது. நேற்றிரவு அங்கு உர தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன.

சுமார் 8 மணியளவில் உரத்தொழிற்சாலையின் முக்கிய பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. ரசாயண கலவைகள் வெடித்துச் சிதறின. இதையடுத்து பயங்கர சத்தத்துடன், தொழிற்சாலைக்குள் வெடி விபத்து ஏற்பட்டது. அடுத்த சில வினாடிகளில் மற்றுமொரு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

2 வெடி விபத்து காரணமாக உரத்தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மற்றொரு பகுதியில் தீ பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் அந்த உரத்தொழிற்சாலை முழுவதும் தீ பிடித்தது.

வெடி விபத்துகள் ஏற்பட்ட சத்தம் 45 மைல் சுற்றளவுக்கு கேட்டது. மிக, மிக சக்தி வாய்ந்த இந்த வெடி விபத்துக்களால் டெக்சாஸ் உரத்தொழிற்சாலை சுற்றுப்பகுதி முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கி, இடிந்து விழுந்தன. உரத்தொழிற்சாலை அருகே இருந்த ஒரு பள்ளிக்கூடமும், நர்சிங் ஹோமும் முற்றிலும் இடிந்து தரை மட்டமாகி விட்டன. பல்லாயிரக்கணக்கான வீடுகளும் இடிந்து விழுந்தன. அதன் இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கி கொண்டனர்.

வெடி விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மற்ற நகரங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மீட்புப் பணிகளும் முடுக்கி விடப்பட்டன. இடிபாடுகளில் சிக்கி கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

உரத்தொழிற்சாலை அருகில் அவசரகால மருத்துவமனை அமைக்கப்பட்டும் சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர்களை வேறு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல 6 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. நவீன எந்திரங்கள் மூலம் இடிபாடுகள் அகற்றப்பட்டன.

வெடி விபத்தில் சிக்கியும், இடிபாடுகளில் சிக்கியும் 60 முதல் 70 பேர் வரை பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment