Thursday,28th of March 2013
சென்னை::தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டப்பேரவையில் நேற்றையதினம் (27-3-2013) இலங்கை தமிழர்களுக்காகத் தமிழக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்கிட தமிழகக் காவல் துறையினர் முயற்சிப்பது குறித்து ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம். அதற்குப் பதிலளிக்க வேண்டிய முதல் அமைச்சர் தன் பேச்சு முழுவதிலும் இலங்கைப் பிரச்சினையிலே நான் “கபட நாடகம்” ஆடுவதாகவும், “இரட்டைவேடம்” போடுவதாகவும் பல பக்கங்கள் பேச்சினைத் தயார் செய்து கொண்டு வந்து அவையிலே படித்துவிட்டு, ஏடுகளுக்கும் விநியோகம் செய்திருக்கிறார்.
கச்சத் தீவு பிரச்சினையாக இருந்தாலும், இலங்கைப் பிரச்சினையாக இருந்தாலும், காவேரி பிரச்சினையாக இருந்தாலும் அரைத்த மாவையே அரைப்பதைப்போல், ஜெயலலிதா சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஜெயலலிதா தன் பேச்சின் துவக்கத்திலேயே, தமிழர் நலன் கருதி மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியேற வேண்டுமென்று அவர் 2009ஆம் ஆண்டே கூறியதாகவும், ஆனால் நானோ அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி இரண்டு வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன் வராவிட்டால், தமிழகத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற அளவில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, என்னைச் சந்தித்த பிறகு, மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்து ராஜினாமா நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஜெயலலிதா இதிலே எதை நாடகம் என்கிறார்? இலங்கையிலே போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்டதும் உடனடியாக 14-10-2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது நாடகமா? (அவரது அகராதியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றாலே “அலர்ஜி” ஆயிற்றே?) அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றியது நாடகமா? அந்தத் தீர்மானத்தை உடனடியாகப் பிரதமருக்கு அனுப்பி, பிரதமர் அரசியல் ரீதியான தீர்வுகாண மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக எடுத்திடும் என்று கூறியது அப்போதே ஏடுகளிலே வெளிவந்ததே, அது நாடகமா? அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பற்றி ஜெயலலிதா அப்போது விடுத்த அறிக்கையில், “தீர்மானத்தைப் பார்த்தால், புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழகமக்கள் மனதில் எழுந்துள்ளது.
இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது” என்றே ஜெயலலிதா தெரிவித்திருந்ததை தற்போது வசதியாக மறந்து விட்டுப் பேசுவதற்குப் பெயர்தான் “இரட்டை வேடம்”.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை கருணாநிதியே பெற்றுக் கொள்ளுதல்” - “எல்லோரும் பிரதமருக்கு தந்தி அனுப்புங்கள்” - “டெல்லியில் பிரதமருடன் சந்திப்பு” - “வேலை நிறுத்தம்” - “பேரணி” - “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்” என பல்வேறு “கண்துடைப்பு” நாடகங்கள்தான் அப்போது நடந்தன என்று சொல்லியிருக்கிறார் என்றால், தி.மு.கழகம் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது “கண்துடைப்பு” என்றால், நேற்றையதினம் ஜெயலலிதா பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா?
ஜெயலலிதா போன்ற ஒருசிலரின் “அபிலாஷை”யின்படி, தி.மு. கழகம் மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறிவிட்டது. இதனால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு விடிவு ஏற்பட்டுவிட்டதா? அமெரிக்கத் தீர்மானத்தில் இந்தியா திருத்தங்களைக் கொண்டு வந்து விட்டதா? நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றிவிட்டதா? மத்திய அரசிலிருந்து தி.மு.க. வெளியேறியது மட்டும் தான் நடந்தது. ஆனால் அதற்காக தி.மு.க. சிறிதும் கவலைப்படவில்லை.
2009இல் தி.மு.க. மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தாலும் இதே நிலை தான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வார்கள். அப்போதே வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், தி.மு.கழகத்தின் மீது பழியைப் போடுகின்ற ஒரு செயலே தவிர வேறல்ல என்பதுதான் உண்மை. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாற்றை அறிந்தவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதுமாத்திரமல்ல; தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்தபோதும், இல்லாதபோதும் இலங்கை தமிழர்களுக்காக இத்தனைப் போராட்டங்களையும் நடத்தியது; அரசியல் ரீதியாகப் பல்வேறு இழப்புகளுக்கும் ஆளானது. ஆனால் ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது எத்தனை நாட்களாக அக்கறை? தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா? 1956ஆம் ஆண்டிலிருந்து நடந்து வரும் நிகழ்வுகளையும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபின் நடக்கும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்களா?
16-4-2002 அன்று இதே சட்டசபையில்; பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்குக் கொண்டு வர வேண்டுமென்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். 17-1-2009 அன்று இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம்தான் என்று ஜெயலலிதா கூறினார்.
இதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு நான் இரட்டை வேடம் போட்டேன் என்று பேரவையில் பேசுகிறார். சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையிலே கூறிவிட்டு தற்போது அதை வேண்டாமென்று ஜெயலலிதா கூறுகிறாரே, அதற்குப் பெயர்தானே “இரட்டை வேடம்”! காவிரி ஆணையத்தை “பல் இல்லாத வாரியம்” “செயல்படாத வாரியம்” என்றெல்லாம் கூறிவிட்டு, தற்போது அதை ஆதரிப்பதற்குப் பெயர்தானே “இரட்டை வேடம்”!
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment