Friday, March 29, 2013
ஈரோடு::ஈழம் குறித்து தமிழக சட்டமன்றம் இயற்றிய தீர்மானம் வரவேற்கத் தக்கது; ஆனால், தனித் தமிழ் ஈழம் என்பது இந்தக் காலகட்டத்தில் சாத்தியமானது அல்ல என்று கூறினார் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.
இன்று ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செய்தியாளர்களிடம் தெரிவித்தவை...
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று, மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம்.
இலங்கை வீரர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே விளையாடக் கூடாது என்று கருதுகிறோம்.
இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம், வடக்கு தெற்கு விவகாரம் தொடர்பாக உள்நோக்கத்துடன் கூறியிருந்தால் அவரை வெளியேற்ற மத்திய அரசு தயங்கக் கூடாது.
வைகோ போன்ற அரசியல்வாதிகள் அரசியல் லாபத்துக்காக இலங்கைத் தமிழர் பிரச்னையில் குளிர் காய்கிறார்கள். அவர்களால் எந்த நன்மையும் ஏற்பட்டு விடாது.
இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இது, உடனடியாக சாத்தியமாகும் விஷயமில்லை. காரணம் இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருள்களில் பெரும்பாலானவை இலங்கை மூலமாகத்தான் வருகின்றன. அதுபோல், இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் இலங்கை வழியாகவே செல்கின்றன.
தமிழக சட்டமன்றத்தில் ஈழம் தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தின் உணர்வுகளை மதிக்கிறோம், ஏற்கிறோம். ஆனால், தனித் தமிழ் ஈழம் என்று கூறப்படுவதை ஏற்க முடியாது. அது, இந்தக் காலகட்டத்தில் சரியான தீர்வாக அமையாது.
மற்ற உலக நாடுகளின் துணையுடன் இந்தியா இலங்கைக்கு நெருக்கடி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, நாம் நேரடியாக இலங்கை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது.
இலங்கைக்கு கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா என்ன வகையில் எல்லாம் உதவியுள்ளது என்பதை விளக்கி, பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், விளம்பரங்கள், குறும்படங்கள் மூலம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மீது கருணாநிதி படுகின்ற வேதனை எங்களுக்குப் புரிகிறது. இதில், மத்திய அரசு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொண்டிருப்பது, கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். அவர், தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்பட விலகல் முடிவினை எடுத்தார்.
தமிழகத்தில் தனித்து நிற்பதுதான் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் விருப்பம். இந்த முடிவினை, எங்கள் உணர்வுகளை கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்துவோம்; அதற்கு கட்டுப்படுவோம்.
- என்று கூறினார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
No comments:
Post a Comment