Saturday, March 2, 2013

சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி : மேகாலயா புதிய முதல்வர் 5ம் தேதி பதவியேற்பு ; திரிபுராவில் 6ல் பதவியேற்பு விழா!

Saturday, March 02, 2013
அகர்தலா::திரிபுரா மாநில முதல்வராக மாணிக் சர்க்கார், வரும் 6ம் தேதி பதவியேற்கிறார். மேகாலயாவில் முகுல் சங்மா தலைமையிலான புதிய அமைச்சரவை 5ம் தேதி பதவியேற்கிறது. இரு மாநிலங்களிலும் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாகாலாந்து முதல்வர் பதவியேற்கும் தேதி இன்னும் முடிவாகவில்லை. வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் சட்டசபை பொதுத் தேர்தல் கடந்த மாதம் நடந்தது. திரிபுராவில் பிப். 14ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகாலாந்தில் 23ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகள் கடந்த 28ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 3 மாநிலங்களிலும் ஆளும் கட்சிகளே மீண்டும் வெற்றி பெற்றன.

திரிபுராவில் கம்யூனிஸ்ட் கூட்டணி தொடர்ந்து 5வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இங்கு மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 49 இடங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கைப்பற்றியது. ஒரு இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஜெயித்தது. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 10 இடங்களே கிடைத்தன. அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் அகர்தலாவில் நாளை நடக்கிறது. இதில் மாணிக் சர்க்கார் மீண்டும் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். அவரது தலைமையிலான புதிய அரசு பதவியேற்கும் விழா, வரும் 6ம் தேதி அகர்தலாவில் உள்ள ராஜ்பவனில் நடக்கிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் டி.ஒய்.பாட்டீல் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

அமைச்சரவையில் புது முகங்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும் என கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 29 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சைகள் மற்றும் தேசியவாத எம்எல்ஏக்கள் 10 பேர் ஆதரவுடன் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தலைநகர் ஷில்லாங்கில் நேற்று நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக முகுல் சங்மா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, கவர்னர் மூஷாஹரியை சந்தித்து ஆட்சி அமைக்க சங்மா உரிமை கோரினார். இதை கவர்னர் ஏற்றுக் கொண்டு அவரை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். வரும் 5ம் தேதி மேகாலயா முதல்வராக 2வது முறையாக முகுல் சங்மா பொறுப்பேற்றுக் கொள்கிறார்.

இந்த இரண்டு மாநிலங்களிலும் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாகாலாந்து மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாகா மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 60. போட்டியிட்ட 59 தொகுதிகளில் நாகா மக்கள் முன்னணி, 38 இடங்களை கைபற்றியுள்ளது. காங்கிரசுக்கு 8 இடங்களே கிடைத்தன. புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக கோகிமாவில் நேற்று நாகா மக்கள் முன்னணி கட்சி புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் நெபு ரியோ மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தொடர்ந்து 3வது முறையாக அவர் மாநில முதல்வராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என முதல்வரின் மீடியா ஆலோசகர் அபு மேத்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment