Wednesday, February 27, 2013

புலி தீவிரவாதிகள் மீண்டும் இலங்கையை எரிக்க முயற்சி! ஒக்சிசன் கொடுக்க வேண்டாம் - அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க!

Wednesday, February 27, 2013
இலங்கை::இலங்கை படையினர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க மறுத்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சிலர் புலிகள் இயக்கத்திற்கு ஒக்சிசன் கொடுக்க முனைவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு பொய்யானது, பக்கச்சார்பானது, ஏற்றுக் கொள்ள முடியாதது, பொது அறிவுக்கு ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமை கூட்டம் நெருங்கி வருவதை அவதானித்து இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இலங்கை மீது சுமத்தப்படுவதாகவும் அதன் நோக்கங்கள் வெவ்வேறு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போர்குற்றத்தில் ஈடுபட்ட சில சிப்பாய்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தொகையை தன்னால் கூற முடியாது எனவும் திசர சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகள் மீண்டும் இலங்கையை தீயிட்டு எரிக்க முயற்சிப்பதாகவும் அதற்கு சிலர் ஒக்சிசன் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இன்று சிறுபான்மை மக்கள் சுதந்திரமாக வாழ்வதாகவும் கொழும்பில் அதிகம் சிறுபான்மை மக்கள் வாழ்வதாகவும் அதில் முக்கிய வியாபாரிகள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களுக்கு கொழும்பில் சகல துறைகளிலும் சம உரிமை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இலங்கை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்போர் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கொண்டு அதனை நீதிமன்றில் சமர்பித்தால் இலங்கை அதற்கு முகங்கொடுக்கும் என திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமியரை இவ்வாறு படையினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்தாக மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் 75 பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அநேகமான குற்றச்சாட்டுக்களுக்கு மருத்துவ ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 26 ஆண்டுகளான நீடித்த யுத்தத்தில் குறைந்தபட்சம் 100000 மக்கள் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்த அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2006ம் ஆண்டு யுத்த நிறுத்த உடன்படிக்கை முறிவடைந்ததன் பின்னர், படையினர் அதிகளவில் பாலியல் ரீதியான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. அநேகமான குற்றச் செயல்கள் அரசியல் ரீதியான பின்புலத்தைக் கொண்டவை எனத் தெரிவித்துள்ளது.

31 ஆண்களும், 41 பெண்களும், மூன்று சிறுவர் சிறுமியரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.  புலிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் வைத்து தாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை கண்காணிப்பகம் அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஜெர்மனி, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் முன்னாள் புலி உறுப்பினர்களிடம் ஒரு வருட காலமாக தகவல்களைத் திரட்டி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

படையினர், துணை இராணுவக்குழுக்கள் மற்றும் காவல்துறையினர் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக சாட்சிகள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment