Thursday, February 28, 2013
இலங்கை::சிலருக்கு, இந்த உலகில் தாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிப்பதற்கு மானசீகமாகவேனும் எதிரிகள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்று யாரோ சொல்லியிருப்பது நம் தமிழ்த் தலைவர்கள் எனப்படுவோருக்கு மிகக் கச்சிதமாகவே பொருந்துகிறது. சமீபத்தில் போயிருந்த ஒரு கூட்டத்தில் நம்மைப் பதற்றமடைய வைக்கும் ஒரு முழக்கத்தைக் கேட்க நேர்ந்தது. என்னதான் எதிர்ப்பு வந்தபோதும் நாங்கள் தனியரசை நிறுவியே தீருவோம் என்று அந்தப் பேச்சாளர் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒன்றும் சாதாரண நபர் அல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்.
கூட்டத்திலிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பிப் புல்லரித்துக் கொண்டதைப் பார்த்தபோது மேலும் பதற்றமாக இருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டங்களில் எல்லாம் அவர்கள் இப்படித்தானே பேசிவருகிறார்கள் என்று கூடவந்த நண்பர் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. எந்த அடிப்படையில் மக்களிடம் மீண்டும் இந்த நம்பிக்கையை ஊட்ட முயல்கிறார்கள்? அதற்கான நம்பிக்கைகள் எதையேனும் இவர்கள் உண்மையிலேயே கொண்டிருக்கிறார்கள் தானா என்று குழப்பமாகவும் இருந்தது.
அட, இந்தத் தலைமுறையிலேதானே தனிநாட்டுக் கனவையும், உலகையே எதிர்த்து வெல்லும் வீரவசனங்களையும் இவர்கள் சொல்லக் கேட்டுக் கேட்டு இத்தனை அவலங்களையும் மக்கள் தலையில் சுமந்தார்கள்? அது ஒன்றும் எப்பவோ நடந்த பழங்காலத்தைய கதை இல்லையே! அத்தனை வீரப்பேச்சுக்களாலும் மக்களை அழிவுக்கு வழிநடத்தித் தள்ளிவிட்டுத் தாங்கள் தப்பிக்கொண்டது, இதோ இப்போதும் அதே பேச்சைப் பேசிக்கொண்டிருக்கும் இதே தலைவர்கள்தானே?தனிநாடு எந்த வகையில் சாத்தியம்? எப்போது சாத்தியம்? யாரால் சாத்தியம்? இது ஒன்றையும் மக்கள் இவர்களிடமோ அல்லது தங்களைத் தாங்களேயோ கேட்டுக்கொள்ள மாட்டார்களா? இந்த நாட்டுக்குள்ளே மற்ற சமூகத்தவர்களோடு சேர்ந்துதான் நாம் வாழ்ந்தாக வேண்டும் என்ற யதார்த்தம் பற்றி எமது மக்கள் நினைத்தேவிடக் கூடாது என்று இத்தகைய பொய்யான மாயைகளை வளர்ப்பது கடைந்தெடுத்த சுயநலமும் வஞ்சக ஏமாற்றும் இல்லையா?
வாழ்க்கைக் கஷ்டங்கள் எவையுமில்லாமல், இந்த வீர இறுமாப்பு வசனங்களோடு திருப்தியடைந்து கொண்டிருப்பவர்கள் தமிழ்மக்களில் எத்தனை பேர்? எத்தனை நூற்றாண்டு கழித்தாவது தனிநாடு வரட்டும் அதுவரைக்கும் இப்படியே சும்மா சவால் விட்டு மிரட்டிக்கொண்டிருப்பதில் கிடைக்கும் நடப்பை அனுபவித்துக் கொண்டிருக்கலாம் என்று நம்மில் எத்தனை பேர் யோசிக்கிறார்கள்?
அரசாங்கம் திணறுகிறது, கவிழப் போகிறது, இதோ சர்வதேசச் சிறைக்குப் போகப் போகிறது என்றெல்லாம் நாம் பூரிப்பதும், தனித்துவ இனமான நாங்கள் யாருடனும் சேர்ந்து வாழமாட்டோம் என்று நம்மாட்களின் வீரப்பேச்சுக்களைக் கேட்டு இறும்பூதடைவதுமாக எவ்வளவு காலத்திற்கு இருக்கப் போகிறோம்? அப்படி ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் யாரும், அன்றாட வாழ்வை ஓட்டுவதற்கே பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அல்ல. அவர்கள் இந்தப் பேச்சுக்களால் உருவாகப் போகும் எந்தக் கஷ்டங்களையும் அவலங்களையும் அனுபவிக்காத வேறு பிரிவினர். எல்லா வசதிகளும் வாய்த்திருப்பதால், ரோசப் பேச்சுக்கள் மூலம் பகையையும் வெறுப்பையும் வளர்த்துவிட்டுக் கொண்டிருப்பவர்கள். மோதலையும் சண்டையையும் உருவாக்கிவிட்டு, நிலைமை ஆபத்தாகிறது என்று தெரிந்தால் எங்காவது பாய்ந்து தப்பியோடிவிடக் கூடிய வசதியுள்ளவர்கள்.அழிவு முடிந்தபின் மீண்டும் வந்து அதே வீரவசனங்களைத் தொடங்கி விடுவதில் வெட்கமோ குற்றவுணர்ச்சியோ கொள்ளாதவர்கள்.
No comments:
Post a Comment