Thursday, February 28, 2013
இலங்கை:தமிழ்த் தேசியத்தை ஓங்கிப் பேசினாலும் தமிழரசுக் கட்சியின் பெயரும் சின்னமும் இல்லாமல் தேர்தலில் வெல்ல முடியாது
முள்ளிவாய்க்காலில் புலிகள் அழித்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பொன்னம்பலத்தாரின்; தமிழ்க் காங்கிரஸ் விலகியது. 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியினர் அனைவரும் தோற்றனர். இந்தக் கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் 2004ஆம் ஆண்டு மற்றும் 2010ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புலிகளின் அனுசரணையால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்ததோடு தமிழ்த் தேசிய வீராவேசத்தின் முதன்மைக் குரல்களாகவும் முழங்கியவர்கள்.
ஆனால் அவர்கள் 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழரசுக் கட்சியால் ஒதுக்கப்பட்டனர். அதனால் தனித்துப் போட்டியிட்டார்கள். ஆனால் படுதோல்வி கண்டார்கள்
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களின் தனித்துவ அரசியல் நிலைப்பாட்டைக்; காட்டவேண்டும் என்ற குரலோடு திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் அத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டார்.அதற்காக த.தே.கூவிலிருந்து அவரும் ஒதுக்கப்பட்டார். அவரை ஆதரித்ததற்காக திரு சிறீகாந்தாவும் த.தே.கூவிலிருந்து ஒதுக்கப்பட்டார். இதனால் அவர்கள் இருவரும் அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் உறுப்பினர்களாகும் வாய்ப்பை இழந்தனர்.
இவர்கள் இருவரும் 2004ஆம் ஆண்டு மற்றும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தது மட்டுமல்ல த.தே.கூவின் பிரதம பேச்சாளர்களாகவும் இருந்தவர்கள். இவர்கள் இலங்கையில் தமிழ்த்தேசியம் மற்றும் அதற்கான சுயநிர்ணய உரிமை தொடர்பாக உரத்துக் குரலெழுப்பியது மட்டுமல்லாது அரச படைகள் புலிகளுக்கு எதிராக நடத்திக் கொண்டிருந்த யுத்தத்தை நிறுத்த தமிழகம் மற்றும் டெல்லி வரை சென்று பிரச்சாரம் செய்;தவர்கள். திரு சிவாஜிலிங்கம் அவர்கள் பிரபாகரனின் அயலவர் என்பதோடு மிகநெருங்கிய பால்யகால நண்பருமாவார். ஆனாலும் இவர்கள் தனியாகப் போட்டியிட்டதனால் 2010ஆம் ஆண்டுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக முடியாமற் போயினர்.
2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பெயரில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த சங்கரியார் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தமிழர்களின் அரசியலில் இருந்து வருபவர். பதினெட்டு ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2001ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழ் வேட்பாளர்களிலேயே அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தவர். ஆனால் 2010ஆம் ஆண்டுத் தேர்தலில் அவரால் ஒரு மரியாதைக்குரிய அளவுக்குக் கூட தனியாக நின்று வாக்குகளைப் பெறமுடியாமற் போனது.
வவுனியா மாவட்டமானது சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் இருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் கோட்டை என்று கருதப்பட்ட இடம். அக்கட்சி வவுனியா நகர சபைத் தேர்தலில் வென்று ஆட்சி நடத்திய காலத்தில் இலங்கையிலேயே மிகச் சிறந்த நிர்வாகத்தை மேற்கொண்ட நகர சபை என்ற பெயரைப் பெற்றது.
சித்தார்த்தன் அவர்களின் தந்தையார் பதினெட்டு ஆண்டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையெங்கும் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். சித்தார்த்தனும்; 40 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்வைக் கொண்டவர். ஏழாண்;டுகளுக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2010ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது அவரது சித்தார்த்தன் அவர்களின் தேர்தல் வெற்றிக்காக மிகவும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டபோதும் அவரால் வெற்றி பெற முடியாமற் போனது.
இவற்றின்; விளைவு என்னவாகியிருக்கிறதெனில், தமிழரசுக் கட்சி மீது வரலாற்றுரீதியாக, சாதிவாத ரீதியாக, சித்தாந்த ரீதியாக, அவர்கள் பாராளுமன்ற எல்லைக்குட்பட்ட அரசியல்வாதிகளே என்ற விமர்சனம் போன்ற வௌ;வேறு காரணங்களால் அவர்களை ஏற்கத் தயாராக இல்லாதவர்கள் - அவர்கள் மீது எதிர்ப்புக் கொண்டவர்கள் - வெறுப்புக் கொண்டவர்களைத் தவிர, மேலும் அரசாங்கத்திடம் வேலை வாய்ப்பு மற்றும் உதவிகளை - ஆதரவுகளை எதிர்பார்ப்போர் என்ற வகையினரையும் தவிர ஏனைய தமிழர்களெல்லாம் தமிழரசுக் கட்சிக்கே ஆதரவாக இருக்கிறார்கள்.
அதன்; வீட்டுச் சின்னத்துக்கே வாக்களிப்பார்கள் - புள்ளடி இடுவார்கள் என்ற கருத்து தமிழர்கள் மத்தியில் பரவலாக கட்சி வேறுபாடுகளை – அரசியல் வேறுபாடுகளைக் கடந்து வலுவாகக் காணப்படுகின்றது. இதில் மாறுபட்ட கருத்துக் கொள்வதற்கான வாதங்களை சிலர் முன்வைப்பினும் அவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு மிகவும் பலயீனமானவையாகவே உள்ளன.
அரசாங்கம் மீதான நம்பிக்கையீனங்களே – வெறுப்புகளே த.தேகூக்காரர்களின் தேர்தல்; வெற்றிகளுக்கு அடிப்படை
த.தே.கூ.காரர்களின் கொள்கைகள், கோரிக்கைகள், அரசியற் செயற்பாடுகள், பொருத்தமான அணுகுமுறைகள் காரணமாக தமிழர்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. மாறாக அரசாங்கத்தின் பாரபட்சமான புறக்கணிப்புகளும,; அகங்காரமான அறிவிப்புகளும், எதேச்சாதிகாரமான செயற்பாடுகளும், அத்துடன் அரச படைகள் தமிழர் பகுதிகளில் தொடர்ந்து மேற்கொள்ளும் அட்டகாசமான நடவடிக்கைகளும், மக்களின் அன்றாட சமூக அரசியல் வாழ்க்கையில் செய்கின்ற அநாவசியமான மூக்கு நுளைப்புகளும்,
மேலும் ராஜபக்ஷாக்கள் தமது சிங்கள வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காகவென மேற்கொள்ளும் தந்திரங்களும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் த.தே.கூ வின் அவசியத்தையும் அதன் மீதான ஆதரவையும் விரிவாக்கி தமிழரசுக் கட்சியின் அரசியற் செல்வாக்கை உறுதியாக்கி வைத்திருக்கின்றன.
இப்படிக் கூறுவது த.தே.கூக்காரர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவானவர்கள் தவிர்ந்த மூன்றாமவர்கள் மத்தியில்; நிலவும் கருத்து மட்டுமே என்று கூறினால் அது சரியல்ல.
த.தே.கூ மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் பலர் மத்தியிலும் இக்கருத்தை தனிப்பட்டரீதியான உரையாடல்களில் கேட்கலாம்.
அந்தக் கட்சிக்கு கூட்டுக்கு ஆதரவான ஊடகங்கள் கூட இக்கருத்தை பல்வேறு தடவைகள் தமது அரசியற் பந்திகளில் வெளிப்படுத்தியிருக்கின்றன.
வடக்கு கிழக்கிலுள்ள பெரும்பாலான தமிழ்ச்; சமயத் தலைவர்கள், பேராசியர்கள், பள்ளிக்கூட ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், உட்பட பல தரப்பட்ட தமிழ்ச் சமூகப் பிரமுகர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே ஆதரவாக உள்ளனர்.
இலங்கைத் தமிழர்களை வாசகர்களாகக் கொண்ட தமிழ் வர்த்தக நாளாந்த பத்திரிகைகளும் த.தே.கூவுக்கே ஆதரவாக நாள் தவறாது பிரச்சாரம் செய்கின்றன. வெளிநாடுகளிலுள்ள புலிவாத பிரமுகர்கள்; புலிகள் இருந்த காலத்தைப் போல அவர்கள் தமது ஆதிக்கத்தை மக்கள் மத்தியிலோ அல்லது அரசியல் அரங்கிலோ இப்போது நேரடியாக வெளிப்படையாகச் செலுத்த முடியாது.
அதேவேளை இந்த வெளிநாடுகள் வாழ்; புலிவாதிகள்; தமது பிரிவினைவாதம், பயங்கரவாதத்தை ஆதரித்தல் என்பவற்றுடன் நேரடியாக இலங்கையின் அரசியலில் ஈடுபடும் வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை என்றாலும்; தமது எண்ணங்களை – கருத்துக்களைத் தொடர்ந்தும் திணித்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் வகையாக ஒரு பிடிமானத்தை தமிழர் அரசியல் மீது வைத்துக் கொள்வதற்கு த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதன் மூலமே அதனைச் சாதிக்கின்றனர்..
வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் மத்தியில் - அவர்கள் அறிந்தோ அறியாமலோ, அவர்களால் புரியப்பட்டோ புரியப்படாமலோ - புலிவாதிகளின் கருத்துக்களே இன்னமும் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன என்பதுவும் உண்மையே.
வெளிநாடுகளிலுள்ள தமிழர்களின் வழிகாட்டுதலின் படியே நாட்டிலுள்ள அவர்களின் உறவினர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள் என்ற ஒரு எண்ணக் கருத்து வலுவாகவே உள்ளது.
இந்த நிலைமையில், வெளிநாடுகளிலுள்ள புலிவாதிகளே தமது தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில் பிரதானமான காரணியாக உள்ளனர் என த.தே.கூவின் பிரதானமான தலைவர்கள் உறுதியாகவே நம்புகின்றனர்.
துள்ளுப்பாட்டுக்காரர்களுக்கு மட்டுமே பாராட்டுக் கிடைக்கும் மேடையில் குத்தாட்டம் போடுபவர்களே சிறந்த கலைஞர்கள்.
இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியில் த.தே.கூவின் செல்வாக்கு தவிர்க்கப்பட முடியாத ஓர் அரசியற் தோற்றப்பாடு என்பதைப் புரிந்து கொண்ட சங்கரியாரும் சித்தார்த்தனும் பல தர்ம சங்கடங்களையும் சகித்துக் கொண்டு த.தே.கூவில் இணைந்து கொண்டார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது த.தே.கூவிலிருந்து ஒதுக்கி விடப்பட்ட சிவாஜிலிங்கம், மற்றும் சிறீகாந்தா அவர்களும் மீண்டும் தமது தாய்க் கட்சியான தமிழீழ விடுதலைக் கழகத்தில் இணைதல் என்பதன் ஊடாக மீண்டும் த.தே.கூவில் சேர்ந்து விட்டார்கள்.
இவர்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட ஏழு த.தே.கூத்தலைவர்களில் எவரும் எந்த மதிப்பும் தங்களுக்குத்தருவதில்லை என்ற பெரும் மனத்தாங்கலுடனேயே உள்ளனர். இவர்களில் எவரும் இப்போது பாராளுமன்ற உறுப்பினரில்லை. அதனால் இன்று நிலவும்; அரசியலில் தாம் ஆக்கிக் காட்டுவதற்கு வேறெந்த வாய்ப்போ மாற்றுக் களமோ இல்லை. எனவே எந்த வகையான அவமானத்துக்கு உட்பட நேர்ந்தாலும் பரவாயில்லை த.தே.கூவோடு ஒட்டி இருந்தாற்தான் அடுத்த தேர்தலின் போதாயினும் எதாவதொரு கதவு திறக்கும் எனக் கடும் பொறுமை விரதம் கொண்டு காலம் காத்து நிற்கின்றனர்.
த.தே.கூவுடன இணைந்திருப்பதன் மூலம்தான் அதிகப்படியான தமிழர்களை அணுக முடியும் - சந்திந்துப் பேச முடியும் என்று அவர்கள் தமது அநுபவ பூர்வமாக ஆதங்கப்படுகிறார்கள். அவர்களின் நினைப்புகள் மற்றும் இன்றைய நிலைகளிலிருந்து பார்க்கையில் அவர்கள் கொண்டிருக்கும் அந்தக் கருத்தை மறுத்து வாதிடுவது மிகவும் சிரமமே.
மேலே சொல்லப்பட்டவர்கள் மட்டுமல்ல பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சிறிதரன் அவர்களும் சகர வரிசை எழுத்தை முதலாகக் கொண்டவரே. இந்தக் கட்சிக்காரர்களும் சங்கரியாருக்கும் சித்தார்த்தருக்கும் மற்றும் சிவாஜிலிங்கத்துக்கும் சிறீகாந்தாவுக்கும் என்ன மரியாதை கிடைக்கிறது என்று முழுமையாகத் தெரிந்திருந்தும் த.தே.கூ ஊடாகத் தலையை நீட்டினாற்தான் மக்கள் மத்தியில் ஒரு முக்கியத்துவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் த.தே.கூவுடன் ஐக்கியப் படுவதற்காக விண்ணப்பத்தைப் போட்டு விட்டு பெறுபேறு எப்போது கிடைக்கும் என்று தெரியாமற் காத்திருக்கிறார்கள்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமைத் தோழர் திரு இரா.துரைரத்தினம் அவர்கள் எத்தனையோ விதமான ஆபத்துக்கள் மத்தியில் மட்டக்களப்பு மக்களிடையே இருந்து சேவை செய்வதிலிருந்து தூரப்போய் அந்நியமாகி விடக்கூடாது என உறுதியோடு நின்று செயற்பட்டு வருபவர்.
புலிகளால் விடப்பட்ட படுகொலைச் சவால்களை மட்டுமல்ல, புலிகளோடு இருந்து பின்னர் சிறிலங்கா அரச படைகளின் பங்காளிகளாவர்களும் விடுத்த சவால்கள் மற்றும் அவர்கள் கொடுத்த நெருக்கடிகளையும் சமாளித்துக் கொண்டு மட்டக்களப்பு மக்கள் மத்தியில் வாழ்வதைவிட்டு விலகவே மாட்டேன் என்று உறுதியோடு எசயற்படுபவர்.
அவருக்கு அரச படைத்தரப்பினரும் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து அவரை அவரது மனச்சாட்சி வழிநின்று வழுக்கி வீழ்த்தி விட எத்தனையோ தடவைகள் முயற்சித்தனர்.
தோழர்;,துரைரத்தினம் அவையெல்லாவற்றையும் அஞ்சாது துஞ்சாது சமாளித்தவர். அதனால் அவர் எதிர்நோக்க வேண்டியேற்பட்ட சத்திய சோதனைகள் அத்தனையையும் சந்தித்துக் கொண்ட போதிலும் - மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட மக்களுக்காக ஓய்வின்றி ஒழிச்சலின்றி உழைப்பவர்; தோழர் இரா துரைரத்தினம்.
கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு அரசியல் பொருளாதாரப் பிரச்சினையாலும் அவற்றை மிகத் துல்லியமாக திட்டவட்டமான தரவுகளுடனும் தகவலுடன் எடுத்துரைப்பதற்கு இன்றைக்கு திரு துரைரத்தினத்தை மிஞ்சும் அளவுக்கு ஆற்றலுடையவர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் எவரும் இருக்கமாட்டார் என்பதை தமிழ் அரசியல் வட்டாரங்களில் உள்ள அனைவரும் அறிவர்.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர் எவருக்கும் அரசநிர்வாக அலுவலகம் ஒன்றில் எதிர்நோக்கும பிரச்சினைக்கு உதவியாகச் செல்வது தொடக்கம் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புக்கான கோரிக்கை கொண்ட போராட்டங்ளில் பங்கெடுக்கிறவரை தோழர் துரைரத்தினம் அவர்கள் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக அனைத்து விடயங்களிலும் முன்னின்று தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்ட அளவுக்கு கிழக்கு மாகாண அரசியலில் இதுவரை ஒருவர் இருந்திருக்கமாட்டார் என்பதை உறுதியோடு அடித்துச் சொல்ல முடியும்.
இன்றிருக்கும் தமிழ் அரசியற் தலைவர்களில்; எண்ணிக்கைரீதியாக அதிகப்படியாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ்க் குடிமக்களை தனிப்பட்டரீதியில் அறிந்தவர் தோழர் துரைரத்தினம் அவர்களே என்றால் மிகையாகாது.
இவ்வாறான தோழர் துரைரத்தினம் அவர்கள் கடந்த மாகாண சபைத் தேர்;தல் வர நெருங்கிய போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றோ தமிழரசுக் கட்சி என்றோ இல்லாமல் தமிழ் மக்களிடமிருந்து வாக்குகளைத் தேவையான அளவு பெற்று தன்னால் வெற்றிபெற முடியாமற் போகும் என்பதைப் புரிந்து கொண்டு உரியபடி செயற்பட்டு அத்தேர்தலில் வெற்றியும் கண்டமை இன்றைய தமிழ் அரசியலில் நிலவும் ஒரு பெரிய உண்மையை வெளிப்படுத்தியிருக்கின்றது.
த.தே.கூவுடன் இணைந்து செயற்பட முற்படுபவர்கள் எல்லோரும் நாடாளுமன்ற அல்லது மாகாணசபை அல்லது குறைந்த பட்சம் உள்ளுராட்சிச்சபை பதவி களுக்கான ஆசையால் மட்டும்தான் இணைந்து செயற்பட முனைகிறார்கள் என ஒரு பொது முடிவுக்கு வந்தால் அது ஒரு மிகத் தவறான முடிவாகும் - எண்ணமாகும்.
அவ்வாறு கருதுவது அவர்கள் இந்தத் தமிழ்ச் சமூகத்துக்காக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சமூக-இலட்சியக் கனவுகளுடன் செலுத்திய உழைப்பையும் வழங்கிய தியாகங்களையும் கொச்சைப்படுத்துவதாகவே அமையும். இங்கு பலரிடம் ஒரு சமூக அக்கறை முதன்மையாக இருப்பதை மறுக்க முடியாது.
அரசாங்கத்தின் போக்குகளும் செயற்பாடுகளும் அரச படையினரின் நடவடிக்கைகளும் அப்படியான தவிர்க்க முடியாத நிலைமைகளையே – தேவைகளையே கட்டாயப்படுத்தியிருக்கின்றன என்பதே இங்கு பிரதானமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். அரசாங்கத்தின் கொள்கைகளும் அரச படைகளின் செயற்பாடுகளும் எதைக் காட்டுகிறதென்றால் இங்கு நேர்மையான அரசியல் நடத்தையும் நியாயமான அரசியல் சமூக பொருளாதாரக் கோரிக்கைகளும் கொண்ட மூன்றாவது அரசியற் சக்திகள் தமிழ்ச் சமூகத்தில் தலையெடுத்து விடக்கூடாது என்பதில் அவை திட்டவட்டமாக முனைப்புடன்; செயற்படுகின்றன என்பதே.
(தொடரும்)
முன்னாள் வடக்கு கிழக்கு முதலமைச்சர் வரதராஐப்பெருமாள்!
No comments:
Post a Comment