Thursday, February 28, 2013
புதுடில்லி:::இலங்கை விவகாரத்தில், ஐ.நா., சபையில் கொண்டு வரவுள்ள தீர்மான அம்சங்களை பரிசீலித்த பிறகே, தீர்மானத்திற்கு எதிராக ஓட்டு போடுவதா, ஆதரித்து ஓட்டு போடுவதா என்பதை, முடிவு செய்ய முடியும்' என, மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. அதே சமயம், "இலங்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும், பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அந்நாட்டுக்கு உள்ளது' என, வெளியுறவு துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார்.
இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை மையமாக வைத்து, அந்நாட்டுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வர, அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளில் உள்ளது. அந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டுமென, தமிழக அரசியல் கட்சிகள், கோரிக்கை விடுத்தபடி உள்ளன. இந்நிலையில், இலங்கை விவகாரம் குறித்து, ராஜ்யசபாவில் நேற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தின் மீது விவாதம் துவங்கும் முன், வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.
அறிக்கை: அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் குறித்து, இலங்கையும், அமெரிக்காவும், ஆலோசனை செய்து கொண்டுள்ளன. அது முடிவுக்கு வரட்டும். இறுதியாக என்ன அறிக்கை தயார் செய்யப்படுகிறது என்பதை பார்த்த பிறகு, தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து, இந்தியா முடிவு செய்யும். இலங்கை விவகாரத்தில், தன் முயற்சிகளை, மத்திய அரசு தொடர்ச்சியாக மேற்கொள்ளும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஇருந்தது. அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் சார்பில், "நோட்டீஸ்' வழங்கப்பட்டு, மூன்று மணி நேரம் நடந்த விவாதத்தில் பேசிய, அனைத்து கட்சி எம்.பி.,க்களும், "இலங்கை மீது, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அதற்கு, இந்தியா முட்டுக்கட்டை போடக் கூடாது' என வலியுறுத்தினர்.
குர்ஷித் விளக்கம்: ஆனால், மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்காமல், நழுவும் வகையிலேயே பதில் அளித்தது. விவாதத்திற்கு பதில் அளித்து, வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் பேசியதாவது: நடந்து முடிந்துள்ள அனைத்துக்குமே, பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு, அந்நாட்டுக்குத் தான் உள்ளது. அது தான் பொருத்தமானதாக இருக்கும். பதில் அளிக்க வேண்டிய கடமை, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வர வேண்டுமே தவிர, வெளியில் இருந்து, எதை செய்வதும் சரியாக இருக்காது. இவ்விஷயத்தில், இந்தியா நடுவராக இருந்து, தீர்ப்போ, நியாயமோ சொல்லி விட இயலாது. ஐக்கிய நாடுகள் சபையில், கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீது, என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை, இப்போதே கூறி விட முடியாது. இருப்பினும், முடிவு எடுப்பதற்கு முன்பாக, சபையில் பேசிய அனைவர் உணர்வுகளும், கருத்தில் கொள்ளப்படும். இலங்கை என்பது, இந்தியாவின் எதிரி நாடு அல்ல; நட்பு நாடு. அதை மறந்து விட கூடாது. இந்தியா - இலங்கை இடையிலான ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த, 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும்படி, இலங்கை அரசை, தொடர்ச்சியாக இந்தியா வலியுறுத்த மட்டுமே முடியும். அதை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு, இலங்கையிடம் தான் உள்ளது. சில மாதங்களில், அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசு, உரிய முறையில் கவனத்துடன் அணுகும். இவ்வாறு, அவர் கூறினார்.
வெளிநடப்பு: வெளியுறவுத் துறை அமைச்சரின் பதிலை கண்டித்து, "நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, உரிய முறையில் பதில் அளிக்கவில்லை' என்று கூறி, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசும் போது, ""இலங்கையில் நடந்த அத்துமீறல்களில், அந்நாட்டு ராணுவம் மட்டுமே, ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அத்துமீறல்களுக்கு, புலிகள் அமைப்பும் காரணம். கடைசி கட்ட போரின்போது, மனித உரிமை மீறல்கள் நிறைய நடந்தன. இதில் புலிகள் அமைப்பினரும், ஈடுபட்டதாக தகவல் உள்ளது,'' என்றார். இதற்கு தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., எம்.பி.,.க்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இலங்கை நட்பு நாடல்ல - அ.தி.மு.க.,; தமிழகம் வேண்டுமா, வேண்டாமா - தி.மு.க.,
இலங்கை விவகாரம் குறித்து, ராஜ்யசபாவில் நேற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் கலந்து கொண்டு, அ.தி.மு.க., தரப்பில் பேசும்போது, "இலங்கை நட்பு நாடல்ல' என்ற வாதம் வைக்கப்பட்டது. தி.மு.க., முன்வைத்த வாதத்தில் தமிழகம் வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வி, மத்திய அரசு முன் வைக்கப்பட்டது.
மைத்ரேயன் (அ.தி.மு.க.,): போர்க் குற்றங்களை கண்டித்து, தமிழக சட்டசபையில், 2009ம் ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே, ஆதரித்து நிறைவேற்றப்பட்ட அந்த தீர்மானத்தில், இலங்கை மீது பொருளாதார தடைகளை கொண்டு வரும்படி, வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாறாக, இலங்கையுடன் உறவு, வர்த்தக ஒப்பந்தம் என தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. சட்டசபை தீர்மானத்திற்கு இதுதான் மரியாதை. இந்தியாவுக்கு வேண்டுமானால், இலங்கை நட்பு நாடாக இருக்கலாம். தமிழகத்திற்கு, இலங்கை நட்பு நாடல்ல.
சிவா (தி.மு.க.,): ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையை கண்டித்து, அந்நாட்டுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்திருக்க வேண்டிய கடமையை, இந்தியா செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதை அமெரிக்கா செய்து கொண்டிருக்கிறது. இலங்கை விவகாரத்தில், எதற்கொடுத்தாலும், இலங்கையைச் சார்ந்தே இந்தியா பேசி வருகிறது. இலங்கையை நட்புநாடு என்று கூறுவதிலேயே, ஆர்வமாக உள்ளது. இந்த போக்கு தொடருமானால், இலங்கை வேண்டுமா, இல்லை தமிழகம் வேண்டுமா என்பதை, இந்தியா முடிவு செய்து கொள்ள வேண்டிய நேரம் வரும்.
வெங்கையா நாயுடு (பா.ஜ.,): இலங்கை அதிபர் ராஜபக்ஷேயும், அவரது சகோதரர் பசில் ராஜபக்ஷேயும், "13வது சட்டத் திருத்தம் என்பதே கிடையாது; அதை ஒருக்காலும் ஏற்க முடியாது' என, தெளிவாக அறிவித்து விட்டனர். ஆனால், இந்தியாவோ, 13 வது சட்டத் திருத்தம் குறித்து, இன்னமும் பேசுகிறது என்றால், உண்மை நிலை என்ன? 2009ம் ஆண்டு நடைபெற்ற அத்துமீறல்களுக்கு, அப்போது இந்தியாவில் நடைபெற்ற ஆட்சியில், கூட்டணியில் இருந்த எல்லாருமே, பொறுப்பேற்றாக வேண்டும்; தப்பிக்க முடியாது.
ஞானதேசிகன் (காங்.,): இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில், இருவேறு கருத்துக்களே இல்லை.
ராஜா ( இந்திய கம்யூ.,): இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க முன்வர வேண்டும்.
ராம்விலாஸ் பஸ்வான் (லோக்ஜனசக்தி): தமிழர்கள் நமது ரத்த சொந்தங்கள். சொந்த சகோதரர்கள் தான் முக்கியம். அதன்பிறகு தான் நட்பு. இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment