Wednesday, February 27, 2013

கொல்கத்தாவில் 6 மாடி வணிக வளாகத்தில் தீவிபத்து: 19 பேர் உடல் கருகி பலி!

Wednesday, February 27, 2013
கொல்கத்தா::கொல்கத்தா மத்திய பகுதியில் உள்ள சீல்டா ரெயில் நிலையம் அருகே சூர்யசென் தெருவில் 6 மாடி வணிக வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. காய்கறி கடைகள், பிளாஸ்டிக் பொருள் விற்பனை செய்யும் கடைகள், துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், பேப்பர் குடோன் உள்ளிட்டவை இங்கு உள்ளன.

இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வணிக வளாகத்திலேயே தங்கி உள்ளனர். இந்த வணிக வளாகத்தில் உள்ள முதல் மாடியில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ மற்ற கடைகளுக்கும் மளமளவென பரவியது. இதனால் கட்டிடத்தில் ஜன்னல் வழியாக கரும்புகை வெளியேறியது. அதிகாலையில் வணிக வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் எழுந்தனர். அவர்கள் உயிர் பிழைக்க அங்குமிங்கும் ஓடினார்கள். ஆனால் வணிக வளாகம் சிறுசிறு கடைகளுடன் நெரிசல் மிகுந்து காணப்பட்டதால் அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை.

அந்த வணிக வளாகத்தில் இருந்து தப்பி வெளியேறுவதற்கு ஒரே ஒரு வாசல் மட்டுமே உள்ளது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்களால் உடனடியாக வெளியே ஓடிவர முடிய வில்லை. தீவிபத்து பற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். 26 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். ஆனால் அந்த வணிக வளாகம் இருந்த இடம் நெரிசலான பகுதி என்பதால் தீயணைப்பு வண்டிகளை உள்ளே கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.


ஆனாலும் தீயணைப்பு வீரர்கள் விடாமுயற்சியுடன் போராடி 3 மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீவிபத்தில் 19 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 6 பேர் பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 30 முதல் 40 பேர் வரை அந்த வணிக வளாகத்தில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. வணிக வளாகத்திற்குள் கருகி கிடக்கும் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்து பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் நூற்றுக் கணக்கானோர் அங்கு திரண்டனர். அவர்களை போலீசார் நெருங்க விடாமல் தடுப்பு அமைத்து மீட்பு பணிகளை துரிதப் படுத்தினார்கள்.

இந்த தீ விபத்தில் கடைகளில் இருந்த துணிமணிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன. லட்சக்கணக்கில் சேதம் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மின்சார கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அங்குள்ள குடோனில் இருந்து தீ பரவியதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment