Thursday, February 28, 2013
சென்னை::சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளி கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் ஆகியோரை முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக நீக்கியுள்ளார். வைகைச்செல்வன், பூனாட்சி, வீரமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அமைச்சர வையில் 2 ஆண்டில் 8 வது மாற்றம் இது.
தமிழகத்தில் 2011ம் ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மே மாதம் 16ம் தேதி முதல்வர் ஜெயலலிதா உள்பட 34 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற 8வது நாளில், நடந்த சாலை விபத்தில் அமைச்சர் மரியம்பிச்சை மரணம் அடைந்தார். இதையடுத்து, முதன் முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப் பட்டு, புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்எல்ஏ முகமதுஜான் ஜூன் 29ம் தேதி புதிய அமைச்சராக பதவியேற்றார். அன்றைய தினம் 6 அமைச்சர்களின் இலாகாவும் மாற்றப்பட்டது.
இதையடுத்து 2வது முறையாக 2011ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ செந்தூர் பாண்டியன் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். அன்றைய தினம் இரண்டு அமைச்சர்களின் இலாகா வும் மாற்றப்பட்டது. 2011ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி அமைச்சர்கள் செந்தமிழன், சண்முகவேலு, புத்திசந்திரன், சண்முகநாதன், உதயகுமார், சிவபதி ஆகிய 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்களாக தாமோதரன், பரஞ்ஜோதி, மூர்த்தி, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, சுந்தர்ராஜன் உள்ளிட்ட 6 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இது தமிழக அமைச்சரவையில் நடந்த 3வது மந்திரிசபை மாற்றம் ஆகும்.
4வது முறையாக, 2011ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சட்டம் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி ராஜினாமா செய்தார். அன்றைய தினம் சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி ஆகியோர் புதிய அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 12ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
5வது முறையாக, 2012ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வருவாய்த்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக என்.ஆர்.சிவபதி, சுப்பிரமணியன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். 6வது முறையாக, 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி தமிழக அமைச்சரவையில் இருந்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக நீக்கப்பட்டு, புது அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் நியமிக்கப்பட்டார்.
7வது முறையாக, 2012ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி வணிகவரித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக பி.மோகன் நியமிக்கப்பட்டார். அன்றைய தினம் 4 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டது. இந்நிலையில், 8வது முறையாக தமிழக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளி கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் விஜய் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா நேற்று அதிரடியாக நீக்கி உள்ளார்.
புதிய அமைச்சர்களாக வைகைச்செல்வன், டி.பி.பூனாட்சி, கே.சி.வீரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக ஆளுனர் மாளிகையில் இருந்து நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா, பள்ளி கல்வி மற்றும் சட்டத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் ஆகியோர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு பதிலாக மணச்சநல்லூர் தொகுதி எம்எல்ஏ டி.பி.பூனாட்சி, அருப்புக்கோட்டை தொகுதி எம்எல்ஏவும் அரசு தலைமை கொறடாவுமான வைகைச்செல்வன், ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ கே.சி.வீரமணி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள். புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள வைகைச்செல்வன் பள்ளி கல்வித்துறை, டி.பி. பூனாட்சி கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை, கே.சி.வீரமணி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் கே.பி.முனுசாமி கூடுதல் பொறுப்பாக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறையையும் கவனிப்பார். கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சராக இருந்த செந்தூர்பாண்டியன் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். புதிய அமைச்சர்களாக வைகைச்செல்வன், பூனாட்சி, வீரமணி ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொள்வர். இவ்வாறு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ராசி இல்லாத சட்டத்துறை
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான 21 மாத அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த 5 அமைச்சர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 6வது முறையாக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமிக்கு சட்டத்துறை கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி முதன்முறையாக இசக்கி சுப்பையா சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றார். அவர் அதே ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி நீக்கப்பட்டு, செந்தமிழன் நியமிக்கப்பட்டார். அவரும் 2011ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி நீக்கப்பட்டார். பின்னர் சட்டத்துறை அமைச்சராக பரஞ்ஜோதி நியமிக்கப்பட்டு, சில வாரங்களில் நீக்கப்பட்டார்.
இதையடுத்து சி.வி.சண்முகத்திடம் சட்டத்துறை ஒப்படைக்கப்பட்டது. அவரும் மந்திரி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த என்.ஆர்.சிவபதியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் அமைச்சர் சிவபதியும் அதிரடியாக நேற்று நீக்கப்பட்டுள்ளார். 6வது முறையாக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருக்கும் கே.பி.முனுசாமியிடம் கூடுதல் பொறுப்பாக சட்டத்துறை தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வைகை செல்வன் வாழ்க்கை குறிப்பு
பெயர்: வைகை செல்வன் (44) விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி எம்எல்ஏ
படிப்பு:எம்ஏ., பிஎல்., பி.எச்டி.,
பதவி: அரசு தலைமை கொறடா, அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர்
குடும்பம்: மனைவி முத்துலட்சுமி, குழந்தைகள் நற்றினை, நற்றமிழ்
தொழில்: முழுநேர கட்சி பணி. (எழுத்தாளர், மேடை பேச்சாளர், இலக்கியவாதி, பட்டிமன்ற பேச்சாளர்)
சொந்த ஊர்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சிலைமலைப்பட்டி
பூனாட்சி வாழ்க்கை குறிப்பு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் பூனாட்சி. 8ம் வகுப்பு வரை படித்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். 1972ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். 1996, 2001ல் முசிறி ஒன்றியம் நெய்வேலி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011 சட்டமன்ற தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் செல்வராஜை தோற்கடித்தார். மண்ணச்சநல்லூர் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவருக்கு மனைவி பாலாம்பாள், மகன்கள் பிரபாகரன், அருண்குமார், மகள் ஜெயந்தி உள்ளனர்.
கே.சி.வீரமணி வாழ்க்கை குறிப்பு
பெயர்:கே.சி.வீரமணி(49), வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி.
பெற்றோர்: கே.கே.சின்னராசு, மணியம்மாள்.
படிப்பு: பி.ஏ., (வரலாறு)
தொழில்: விவசாயம், பீடி தொழிற்சாலை, கார்மென்ட்ஸ், கெமிக்கல் தொழிற்சாலை.
குடும்பம்: மனைவி மேகலை (37), அகல்யா (14), இனியவன் (9), யாழினி (9) குழந்தைகள்.
பதவி: 1993ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த இவர், மாவட்ட விவசாய அணி செயலாளர், ஒன்றிய செயலாளர், 2001ல் ஒன்றியக்குழு தலைவர், 2006ல் ஒன்றியக் குழு துணைத்தலைவர், 2006 ஆகஸ்டு முதல் வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர்.
குறிப்பு: ஜோலார்பேட்டை தொகுதியின் முதல் எம்எல்ஏ மற்றும் அமைச
No comments:
Post a Comment