Saturday, January 5, 2013

வேலூர் சிறையில் உள்ள ராஜிவ் கொலையாளி முருகனை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை!

Saturday, January 05, 2013
வேலூர்:வேலூர் சிறையில் உள்ள ராஜிவ் கொலையாளி முருகனை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு டிசம்பர், 8ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் போலீஸார் சிறையில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, முருகனிடமிருந்து மொபைல்ஃபோன் ஒன்று, நான்கு சிம் கார்டு, மெமரி கார்டு, இரண்டு, "சிடி'க்களை சிறைத்துறை விஜிலன்ஸ் போலீஸார் பறிமுதல் செய்தனர். பாகாயம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், முருகனிடம் பறிமுதல் செய்த மொபைல் மூலம் அடிக்கடி இலங்கை, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பேசியது தெரிந்தது.

இதையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக சிறை நன்னடத்தை விதிகள் படி முருகன் மீது சிறைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை முருகனும், அவரது மனைவி நளினியும் அரை மணி நேரம் சந்தித்து பேசிக் கொள்ள தடை விதிக்கப்பட்டது. அதே போல முருகனை சந்திக்க, அவரது உறவினர்கள், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இது குறித்து முருகனிடம் சிறைத்துறையினர் கூறினர். நேற்று முருகனை சந்திக்க காட்பாடி பிரம்மபுரத்தில் இருந்து, பத்து பேர் வந்தனர். அவர்களுக்கு சிறைத்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர்.

No comments:

Post a Comment