Saturday, January 26, 2013

கூட்டணி யாருடன் என்பதில் விஜயகாந்த் மவுனம்!: பொதுக் குழுவில் சஸ்பென்ஸ் பேச்சு!

Saturday, January 26, 2013
சென்னை::அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, "கல்தா' கொடுக்கப்பட்ட, தே.மு.தி.க., லோக்சபா தேர்தலில், யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு, அக்கட்சியின் பொதுக்குழுவில் விடை கிடைக்கவில்லை. "தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை, நேரம் வரும்போது அறிவிப்பேன்' என, விஜயகாந்த், "சஸ்பென்ஸ்' வைத்ததால், நிர்வாகிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த, தே.மு.தி.க., கடந்த ஆண்டு, கூட்டணியிலிருந்து கழட்டி விடப்பட்டது. அக்கட்சியை சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்கள், ஆளுங்கட்சி ஆதரவு நிலை எடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.உள்ளாட்சித் தேர்தலில், மார்க்சிஸ்டுகளுடன் கூட்டணி அமைத்த விஜயகாந்த், சங்கரன்கோவில், புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும் தனித்து களம் கண்டார். இந்நிலையில், லோக்சபா தேர்தலில், விஜயகாந்த் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, தொடர்ந்து அவதூறு வழக்குகள் பாய்ந்து வருகின்றன. ஆளுங்கட்சி மீது, விஜயகாந்த் தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்க, தி.மு.க., வலை வீசியுள்ளது.தே.மு.தி.க.,விற்கு ஆதரவான கருத்துக்களை, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், ஸ்டாலினும் தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க.,விற்கு இணையாக, தி.மு.க., மீது தாக்குதல் நடத்தி வந்த விஜயகாந்தும், தற்போது அடக்கி வாசிக்கத் துவங்கிஉள்ளார்.இந்த நிலையில், சென்னை வானகரத்தில், தே.மு.தி.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில், லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் வெளிப்படையாக அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு, இரு கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் இருந்தது.ஆனால், யாருடன் கூட்டணி என்பது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல், "நேரம் வரும்போது, கூட்டணி குறித்து அறிவிப்பேன்'என, விஜயகாந்த், "சஸ்பென்ஸ்' வைத்துள்ளார்.

பொதுக்குழுவில் அவர் பேசியதாவது:

நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் போணியாகாது என்றனர். எனக்கு போராட்ட குணம் அதிகம்; தே.மு.தி.க., மிகப்பெரியதாக வளர்ந்து இருக்கிறது. அ.தி.மு.க.,வும், - தி.மு.க.,வும், எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள துடிக்கின்றன.

மற்றவர்களை போல, கதை சொல்லி யாரையும் ஏமாற்ற மாட்டேன். மனதில் என்ன தோன்றுகிறதோ, அதை மட்டுமே பேசுவேன். நான் நல்லவனா, கெட்டவனா என்பது மக்களுக்கு தெரியும்.தமிழகத்திற்கு துரோகம் செய்பவர்களை, 40 தொகுதிகளிலும் மக்கள் புறக்கணிப்பர். கடந்த ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்ததால், அவரை திட்டினேன்; இப்போது, ஜெ., முதல்வராக இருப்பதால், அவரை திட்டுகிறேன்.

இரண்டு பக்கத்திலும், என்னை அழிப்பதற்கு பல சதிகள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில், பேச்சுரிமை, கல்வியுரிமை, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், நாள்தோறும் என் மீது அவதூறு வழக்குகள் தொடரப்படுகின்றன. இதனால், நான் பயந்து விடமாட்டேன்.நாங்களும் நினைத்தை சாதிப்போம். லோக்சாபா தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. நேரம் வரும்போது, கூட்டணி குறித்து அறிவிப்பேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்."மக்களோடும், தெய்வத்தோடும் கூட்டணி' என்ற பழைய பல்லவியை, தன் பேச்சினிடையே விஜயகாந்த் பாடியதால், "கூட்டணியில்லாமல் மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டுமோ' என, தே.மு.தி.க., நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.கட்சியின் பொருளாளரான சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ., - அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக செயல்படும் நிலையில், பொதுக்குழுவில் அவரை நீக்கிவிட்டு, புதிய பொருளாளராக சேலம் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசுக்கு கண்டனம் : பொதுக்குழுவில் தீர்மானம்

டீசல் விலையை மாதத்திற்கு ஒருமுறை உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ள, மத்திய அரசுக்கு,தே.மு.தி.க., பொதுக்குழுவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை, வானகரத்தில் நேற்று நடந்த, தே.மு.தி.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:போதிய தண்ணீர் இல்லாததால், தற்கொலை செய்த, 12 டெல்டா விவசாயிகள் குடும்பத்தின் வாழ்வுரிமைக்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பேரிடர் நிவாரண நிதியை, மத்திய அரசிடம் இருந்து பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.விஜயகாந்த் மீது, பொய்யாக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்குகளை, அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். போலீசை ஆளும் கட்சியின் கைப்பாவையாக பயன்படுத்துவதை தவிர்த்து, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். வழக்கறிஞர்களின் கருத்தை கேட்ட பிறகே, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது, கண்டிக்கத்தக்கது.ரயில் கட்டணம், மருந்து விலை, "காஸ்' விலைகளை உயர்த்தியது மட்டுமல்லாமல், டீசல் விலையை மாதத்திற்கு ஒருமுறை உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ள, மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.இவை உள்ளிட்ட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment