Saturday, January 26, 2013
சென்னை::சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா இன்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கவர்னர் ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதைத் தொடர்ந்து நடந்த வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். நாட்டின் 64-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவையும், அணிவகுப்பையும் பொதுமக்கள் பார்க்க வசதியாக கடற்கரை சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விஐபிக்கள், அதிகாரிகளுக்காக காந்தி சிலையின் இரு புறத்திலும் துணி பந்தல் போடப்பட்டிருந்தது. காந்தி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 5 மணி முதலே குடியரசு தினவிழாவை பார்ப்பதற்காக மெரினாவில் மக்கள் குவியத் தொடங்கினர். காலை 7.48 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், டிஜிபி ராமானுஜம் வரவேற்றனர். பின்னர், முதல்வர் காரில் லைட் ஹவுஸ் வரை சென்று சாலையின் இருபுறமும் கூடியிருந்த மக்களுக்கு குடியரசுதின வாழ்த்துக்களை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து 7.52 மணிக்கு முப்படை வீரர்கள் புடை சூழ கவர்னர் ரோசய்யா வந்தார். அவரை முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். முப்படை தளபதிகள், போலீஸ் அதிகாரிகளை அவருக்கு முதல்வர் அறிமுகம் செய்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த விசேஷ கம்பத்தில் சரியாக 8 மணிக்கு தேசியக் கொடியை கவர்னர் ரோசய்யா ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது வானில் பறந்து வந்த கடற்படை ஹெலிகாப்டர், வண்ண மலர்களை தூவியது. இதைத் தொடர்ந்து வீரதீர செயல் புரிந்தவர்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். விழாவில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) எலிப்பி தர்மராவ், சபாநாயகர் தனபால், ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், முப்படை பொறுப்பு அதிகாரிகள், சென்னையில் உள்ள இந்தியாவுக்கான வெளிநாட்டு தூதர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மறைந்த தேவராஜ், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மறைந்த ஜவஹர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த எல்.சிவா, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தங்கவேலு, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மு.ராஜா, தேன்கனிகோட்டை, கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அதிகாரி நடராஜன், முதல்நிலை தீயணைப்பு வீரர் ராஜபூஷணம், தீயணைப்பு வீரர்கள் வெங்கடசாமி, செல்வம், வீ.ராஜா, பெத்தையா ஆகியோருக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு பதக்கத்துடன் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.கோட்டை அமீர் மதநல்லிணக்க விருதும், ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த ம.ஐயூப்கானுக்கு வழங்கப்பட்டது. மதுவிலக்கை சிறப்பாக அமல்படுத்தியதற்காக மதுவிலக்கு மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பி தேவராணி, சேலம் குற்றப்பிரிவு மற்றும் மதுவிலக்கு கூடுதல் எஸ்பி ஈஸ்வரன், சென்னை தெற்கு மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் டிஎஸ்பி விமலா, அரூர் மதுவிலக்கு பிரிவு சிறப்பு எஸ்ஐ சக்திவேல், மாதவரம் மதுவிலக்கு அமல்பிரிவு தலைமை காவலர் ஸ்டாலின் சந்திரசேகர் ஆகியோருக்கு உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
வேளாண்மை துறை சிறப்பு விருது மற்றும் ரூ.5 லட்சம், ரூ.3,500 மதிப்புடைய பதக்கத்தை மதுரை மாவட்டம் வெள்ளியங்குன்றம் கிராமத்தை சேர்ந்த சோலைமலை பெற்றார். திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு வேளாண்மை துறை சிறப்பு விருது இந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பு மரியாதையை கவர்னரும் முதல்வரும் பார்வையிட்டனர். வான்படை, ராணுவ படை, கடற்படை, சிஆர்பிஎப், பெண் கமாண்டோ படை, தமிழக காவல் துறை வீரர்கள் வரிசையாக அணி வகுத்து வந்தனர். தமிழர்களின் பெருமையை விளக்கும் பாடல்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆடிய வண்ண மயமான நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. ஒயிலாட்டம், கோலாட்டம், கை சிலம்பாட்டம், தேசிய ஒருமைப்பாடு நடனம் போன்றவை அணிவகுப்பில் இடம்பெற்றன. தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் கலந்து கொண்டன. கல்லூரிகளுக்கு இடையே நடந்த நடன நிகழ்ச்சியில் முதல் பரிசை எஸ்பிஎன்பி வைஷ்ணவா மகளிர் கல்லூரியும், 2-ம் பரிசை ராணிமேரி கல்லூரியும், 3ம் பரிசை வேப்பேரி ஜெயின் மகளிர் கல்லூரியும் பெற்றன. பள்ளிகள் அளவிலான நடன நிகழ்ச்சியில் முதல் பரிசு சீத்தாராம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கும், 2-ம் பரிசு மயிலாப்பூர் சிறுவர் பூங்கா மகளிர் மேல்நிலை பள்ளிக்கும், 3-ம் பரிசு அசோக்நகர் சென்னை மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும் வழங்கப்பட்டன. விழாவையொட்டி மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. போலீசார் கடலுக்குள் கப்பலில் இருந்தபடி கண்காணித்தனர். மாலையில் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு கவர்னர் மாளிகையில் தேனீர் விருந்து அளிக்கப்படுகிறது.







No comments:
Post a Comment