Tuesday, January 29, 2013
புதுடெல்லி::(புலிகளின் ஆதரவு) டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கொடுத்தார். ஈழத்தமிழ் மக்களின் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமை களை மீட்டு, சமத்துவம், அமைதியை நிலை நாட்ட இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஐ.நா. சபை தீவிர அழுத்தம் தருமாறு அதன் உறுப்பு நாடுகளை வலியுறுத்துவது என ‘டெசோ‘ அமைப்பு முடிவு செய்தது. இதற்காக, மு.க.ஸ்டாலின் தலைமை யில் டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் டெல்லி சென்றனர்.
டெல்லியில் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை ஸ்டாலினும் டெசோ உறுப்பினர்களும் சந்தித்து `டெசா’ அமைப்பின் தீர்மானங்களை அவரிடம் வழங்கி, இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டனர். அவர்களிடம்,‘பிரதமரிடம் இதுகுறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக’ ஜனாதிபதி உறுதியளித்தார். அதன்பிறகு மாண்டி நீக்ரோ நாட்டின் தூதர் ஜேனீஸ்டார் பரியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான டெசோ உறுப்பினர்கள் சந்தித்து டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை வழங்கி ஈழத் தமிழர் வாழ்வுரிமையை பாதுகாக்க ஐ.நா. அமைப்பை வலியுறுத்த கேட்டுக் கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் பேட்டி: ஜனாதிபதியை சந்தித்த பிறகு நிருபர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு: தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் அமைந்துள்ள டெசோ அமைப்பின் சார்பில் ஏற்கனவே ஒரு மாநாட்டினை நடத்தியுள்ளோம். அந்த மாநாட்டில் இலங்கைவாழ் தமிழ் பெருங்குடி மக்களுக்காக 14 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.
அந்த தீர்மானங்களை ஏற்கனவே டெசோ அமைப் பின் சார்பில் நானும், கழக நாடாளுமன்றக் குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவும், ஐ.நா. சென்று அங்கே துணைப் பொதுச் செயலாளரிடத்தில் வழங்கியிருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஜெனீவாவில் மனித உரிமை ஆணையத் தலைவரிடமும் கொடுத்தோம்.
அதற்குப்பிறகு டெசோ அமைப்புக் கூட்டம் மீண்டும் கூடி இத்துடன் இந்தப் பணியை விட்டு விடாமல் தொடர்ந்து உலக நாடுகளின் முக்கிய நாடுகளாக இருக்கக்கூடிய பிரதிநிதிகளை தூதர்களைச் சந்தித்து ஏற்கனவே ஐ.நா. மன்றத்தில் வழங்கியிருக்கின்ற தீர்மானங்களை வலியுறுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அத்தீர்மானங்களை தூதர்களிடத்தில் சந்தித்து வழங்குவதற்காக தலைவர் கலைஞர் அவர்களின் ஆணையை ஏற்று டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் இங்கே வந்திருக்கிறோம். அந்தப் பணியை இன்று காலையில் இருந்து தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.
குடியரசுத் தலைவரை சந்தித்து டெசோ அமைப்பின் தீர்மானத்தை வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கினோம். அவரும் நாங்கள் கூறியவற்றை பொறுமையாக கேட்டு அதற்குப் பிறகு அவர் எங்களுக்கு ஒரு உறுதி தந்திருக்கிறார். உடனடியாக பிரதமரிடத்தில் இது குறித்து பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய வகையில் துணை நிற்பேன் என்ற உறுதியை எங்களிடத்தில் தந்திருக்கிறார்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டா லின் பேட்டியளித்தார். ஜனாதிபதியை சந்திக்க ஸ்டாலினுடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன்,, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், முன்னாள் மத்திய அமைச் சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஆகியோரும் சென்று இருந்தனர்.
No comments:
Post a Comment