Monday, January 28, 2013
திருநெல்வேலி::கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க, தமிழக மற்றும் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையே, சுமூக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.நெல்லையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய - இலங்கையின் சர்வதேச கடல் எல்லையை வரையறை செய்ய, தமிழக மற்றும் இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பிரச்னையில், தமிழக அரசின் ஒப்புதலை பெற, மத்திய வெளியுறவுத் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.தமிழக அரசு ஒத்துழைத்தால் மீனவர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணமுடியும்.கூடங்குளம் அணுமின் நிலைய கட்டுமான பணியை முடித்து, உற்பத்தியை துவக்க இதுவரை, 17 உத்தரவுகளை அணுமின் கழகம் பெற்றுள்ளது. 99.8 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன.இறுதி கட்டமாக, இயந்திரங்கள் செயல்பாடுகள் குறித்த பரிசோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.ஏற்கனவே கடந்த, ஜன., 15ம் தேதி திறக்க நடவடிக்கை எடுத்தோம். அணுஉலையில் குளிர் நீர் ஓட்டம், வெப்ப நீர் ஓட்டம் என, இரண்டு பகுதிகளில், வெப்ப நீரோட்டத்தில் லேசான கசிவுகள் இருந்தது சரிசெய்யப்பட்டு உள்ளது. அணுஉலை பாதுகாப்பு அமைப்பு, தன் சோதனையை முடிக்காததால் தாமதம் ஏற்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment