Monday, January 28, 2013

இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் - இலங்கை திரைப்பட தணிக்கைச் சபை!

Monday, January 28, 2013
இலங்கை::இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இலங்கையில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கும் தணிக்கைச் சபை தெரிவித்துள்ளது.

எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய கருத்துக்கள் அந்தப் படத்தில் இல்லை என்று தாங்கள் கருதுவதாகவும் இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர தெரிவித்தார்.

எனினும் வெளியிடுவதற்கு முன்னதாக முஸ்லிம் தலைவர்களுக்கு திரைப்படம் போட்டுக் காண்பிக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் இந்த மாதம் 25-ம் திகதி வெளியான கமல்ஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் மற்றும் இலங்கையிலுள்ள திரையரங்குகளில் வெளியிட முடியாமல் தொடர்ந்தும் தடை உள்ளது.

படத்தை வெளியிட முடியாதவாறு தமிழக அரசு இருவார கால தடைவிதித்த நிலையில், அடுத்தக் கட்டமாக இலங்கையிலும் படத்தை வெளியிடாது நிறுத்தி வைத்திருப்பதாக இலங்கை அரசாங்கமும் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

´இந்த நாட்டில் இந்தப் படத்தை வெளியிடுவதில் தடைகள் ஏதும் இருக்காது என்றுதான் நாங்கள் கருதுகின்றோம். ஏனென்றால் இந்தப் படத்தில் எந்தவொரு மதத்தவர்களுக்கோ இனக்குழுக்களுக்கோ அநீதி ஏற்படுத்தும் விதத்தில் ஏதும் இல்லை என்பதுதான் எமது கருத்து´ என்று கூறினார் இலங்கை தணிக்கைச் சபை தலைவர்.

படத்தில் ஆட்களைக் கொல்லுகின்ற வன்முறைக் காட்சிகள் உள்ளதாகவும் அவற்றை நீக்கிவிட்டே படத்தை வெளியிடத் தீர்மானத்துள்ளதாகவும் இலங்கை தணிக்கைச் சபை கூறுகிறது.

இந்தியாவில் விஸ்வரூபம் படம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதனாலும் இலங்கையில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததாக காமினி சுமனசேகர தெரிவித்தார்.

No comments:

Post a Comment