Tuesday, January 29, 2013
சென்னை::(புலி ஆதரவு "டெசோ') தீர்மானங்கள் தொடர்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தி.மு.க., - எம்.பி.,க்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் டில்லி பயணம், உலகத் தமிழர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், "டெசோ' அமைப்பின் சார்பில், சென்னையில் நடந்த மாநாட்டில், இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கான, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐ.நா, துணை பொதுச் செயலர் யான் லியான், ஜெனிவா மனித உரிமை கமிஷனின் தலைவர் நவநீதம் பிள்ளை ஆகியோரை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் நேரில் சந்தித்து, மனுக்களை வழங்கினார்.இதைத் தொடர்ந்து, இலங்கையில், அமைதியை நிலை நாட்டுவதற்கு, ஐ.நா., சபை அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக, ஐ.நா., சபையின் உறுப்பு நாடுகளின் தூதர்களையும் நேரில் சந்தித்து, வலியுறுத்துவதற்கு, ஸ்டாலின், நேற்று முன்தினம், டில்லிக்கு புறப்பட்டு சென்றார்.அவருடன் டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீரபாண்டியன் ஆகியோரும் சென்றனர்.
டில்லிக்கு புறப்படும் முன், சென்னையில், ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், "இலங்கை சமத்துவம், அமைதியை நிலைநாட்ட, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி, டெசோ தீர்மானங்களை, 47 நாடுகளின் தூதர்களிடம் வழங்குவோம்' என, தெரிவித்தார்.ஆனால், இரண்டு நாட்களில், 47 நாடுகளின் தூதர்களை சந்தித்து, வலியுறுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது. டில்லிக்கு சென்ற ஸ்டாலின், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்து பேசியுள்ளார். மேலும், டில்லியில் உள்ள ஐ.நா., சபை அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உலகத் தமிழர்களிடம், ஸ்டாலின் டில்லி விஜயம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை; ஏமாற்றமே மிஞ்சியது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இது குறித்து தி.மு.க.,வட்டாரங்கள் கூறியதாவது:
ஐ.நா., சபையின் உறுப்பு நாடுகளான, 47 நாடுகளின் தூதர்களையும், இரண்டு நாட்களில் சந்திக்க முடியாது. சில நாடுகளின் தூதர்களை மட்டும் சந்தித்து மனு அளித்துள்ளனர். டில்லியில் உள்ள, ஐ.நா., சபை அலுவலகத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.இலங்கை போருக்கு பின் கற்ற பாடங்கள், அனுபவங்களை கொண்டு, எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை என்ற அறிக்கையை நிறைவேற்ற சொல்வதை, உலகத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.அந்த அறிக்கை வழங்கியதன் மூலம், மீண்டும் ராஜபக்ஷேவின் அதிகாரம் வலுப்பெறும். இலங்கை தமிழர்கள் எதிர்பார்க்கும் சமத்துவம் கிடைக்காது. எனவே, ஸ்டாலின், டி.ஆர்.பாலு டில்லி பயணம், உலகத் தமிழர்கள் மத்தியில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment