Saturday, December 15, 2012
சென்னை::தமிழக மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்க வசதியாக பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் படிக்க வசதியாக தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றமும் தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குனர் பால் செல்லர்ஸ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். பேராசிரியர்கள் கற்பிக்கும் திறனை மேம்படுத்தவும் மாணவர்களும் பேராசிரியர்களும் புகழ் பெற்ற அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்க செய்யவும் ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளவும் முடியும். 2013ம் ஆண்டு 25 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள் அயல்நாடு சென்று கல்வி கற்கவும், பயிற்சி மேற்கொள்ளவும் பிரிட்டிஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாணவர் மற்றும் பேராசிரியருக்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் மூலம் ரூ.15 லட்சம் அனுமதித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின்படி, முதல் ஆண்டு முதுகலை படிக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அந்த மாணவர்கள் 2ம் ஆண்டின் மூன்றாவது பருவத்தை அயல்நாட்டில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கும், அதே பருவத்திலேயே பேராசிரியர்களும் உரிய பயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பான உயர்கல்வியை வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வி அறிவு பெரிதும் மேம்படும். அவர்களின் எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய வழிவகை ஏற்படும்.
No comments:
Post a Comment