Thursday, November 1, 2012

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் தீர்மானித்துள்ளது?

Thursday, November 01, 2012
இலங்கை::பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் குற்றப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி வழங்கியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான பிரேரணையை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118 பேரிடம் அரசாங்கம் ஏற்கனவே கையெழுத்துக்களை பெற்றுள்ளது.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயகா தனது கணவருடன் தொடர்புள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் நீதி சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுளா திலகரட்ன தொடர்பான இவரது செயற்பாடுகள் ஆகியவை தொடர்பாக இந்த குற்ற பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையொப்பமிட்டிருந்தால் குற்றப் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொள்வார். அத்துடன் இந்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஒரு வாக்கு பெரும்பான்மையாக இருந்தால் போதுமானதாகும்.

இதேவேளை, பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றங்களை ஆராய்வதற்காக தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment