Thursday, November 1, 2012

சென்னையில் கரை தட்டிய கப்பலில் இருந்து ஊழியர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு:தரை தட்டிய கப்பலில் மீட்கப்பட்டவர் பலி!

Thursday, November 01, 2012
சென்னை::சென்னை பட்டினபாக்கத்தில் கரை தட்டிய கப்பலில் இருந்து, ஊழியர்கள் ஹெலிகாப்டர் உதவியின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். அதிகாலையிலிருந்து 15 ஊழியர்கள் மீட்கப்பட்டனர். நிலம் புயலால் சரக்கு கப்பலான பிரதிபா காவேரி, பட்டினபாக்கம் கடற்கரையில் கரை தட்டியது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தாவில் இருந்து குருடாயில் ஏற்றிவந்த பிரதிபா காவேரி என்ற சரக்கு கப்பல் கடந்த மாதம் சென்னை துறைமுகத்துக்கு வந்தது. சரக்குகளை இறக்குமதி செய்துவிட்டு, துறைமுக எல்லையில் பிரதிபா காவேரி கப்பல் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை அருகே நேற்று மாலை நிலம் புயல் கரையை கடுக்கும் போது கடல் அலைகள் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றும் பலமாக வீசியதால், பிரதிபா காவேரி சரக்கு கப்பல் நகர்ந்து வந்து பெசன்ட் நகர் ஊரூர் குப்பம் (எலியட்ஸ் பீச்) அருகே தரை தட்டியது. கப்பலில் இருந்த ஊழியர்கள் 17 பேர் லைப் போட் மூலம் கப்பலில் இருந்து தப்பித்தனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், லைப் போட் கவிழ்ந்தது. இதில் தண்ணீரில் தத்தளித்த 6 பேரை மீனவர்கள் படகு மூலம் சென்று மீட்டனர். மற்றவர்கள் படகை பிடித்துக்கொண்டே கரைக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், தமிழகத்தை சேர்ந்த ஆனந்த் மோகன் ராஜ் (30) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...

இந்திய கடல் பகுதியில் உருவாகும் புயல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக பெயர் வைத்துள்ளனர். இதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளனர். அதில் பங்களாதேஷ், இந்தியா, மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகளை உள்ளடக்கி உள்ள கடல் பிரதேசங்களில் உருவாகும் புயல்களுக்கு மேற்கண்ட நாடுகள் பெயர்களை பரிந்துரை செய்கின்றன. அதன்படி இதுவரை 32 பெயர்களை முதற்கட்டமாக வெளியிட்டுள்ளனர். இதுவரை வந்த 29 புயல்களுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ள பெயர்கள் வரிசைக்கிரமமாக சூட்டப்பட்டன. இப்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘நிலம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். நிலம் என்ற இந்த பெயரை பாகிஸ்தான் பரிந்துரை செய்தது. அதை ‘நீலம்’ என்று அழைக்க வேண்டும் என்றும் அந்த நாடு குறிப்பிட்டது. ஆனால், டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த புயலின் பெயரை ‘நிலம்’ என்று உச்சரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு புயலின் பெயரையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று விளக்கி ஒருபட்டியலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி இப்போது உருவாகியுள்ள புயலை ‘நிலம்’ என்று அழைக்க வேண்டும். இது தவிர இனிமேல் வர உள்ள புயலுக்கு ‘மகசென்’ என்ற பெயரை இலங்கை சூட்டியுள்ளது. அதற்கு அடுத்த புயலின் பெயரை தாய்லாந்து பரிந்துரை செய்துள்ளது.

No comments:

Post a Comment