Monday, October 29, 2012
இலங்கை::முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனா இந்திய அழுத்தங்கள் காரணமாக தூரநோக்கின்றி ஸ்தாபித்த மாகாண சபை முறைமை நாட்டிற்கு எந்த வகையிலும் பொருத்தமற்றது என மல்வத்தை மற்றும் அஸ்கிரய மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, அவற்றை உடனடியாக தற்போது தன்னும் ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் விமல் வீரவன்ச இன்று முற்பகல் மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்ற போதே அவர்கள் இதனை குறிப்பிட்டனர்.
13ஆம் அரசியல் அமைப்பு திருத்தத்தை காரணமாக கொண்டு எதிர்காலத்தில், நாட்டில் ஏற்படக் கூடிய பாதிப்புத் தன்மை தொடர்பாக அமைச்சர் மகாநாயக்காக்களிடம் விபரித்துள்ளார்.
இந்தியா போன்ற வல்லரசு நாடொன்றுக்கு மாகாண சபை முறைமை பொருத்தமாக இருப்பினும், இலங்கை போன்ற தீவுகம் ஒன்றிற்கு அது உகந்தது அல்ல என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.
இந்தியாவின் மானிலம் ஒன்று, முழு இலங்கையினை விடவும் பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ளதனால், அதனை இலகுவாக நிர்வகிப்பதற்கு இந்தியாவில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, மாகாண சபை முறைமை மாத்திரம் அல்லாமல், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மற்றும் விருப்பு வாக்கு முறைமை என்பனவும் ரத்து செய்யப்பட வேண்டும் என மல்வத்த மகாநாயக்க தேரர், அமைச்சர் விமல் வீரவன்சவிடம் தெரிவித்தார்.
இவ்வாறான நாட்டிற்கு ஒவ்வாத முறைமைகளை கடைப்பிடிப்பதன் காரணமாக நிதி விரயம் மட்டுமே ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment