Tuesday, October 30, 2012

தைரியம் இருந்தால் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் : தேமுதிகவில் இருந்து தாவிய எம்எல்ஏக்கள் ஆவேசம்!

Tuesday, October 30, 2012
சென்னை::தைரியமும், திராணியும் இருந்தால் கட்சியை விட்டு நீக்கி பாருங்கள்’ என்று அதிருப்தி தேமுதிக எம்எல்ஏக்கள், விஜயகாந்துக்கு சவால் விடுத்துள்ளனர். சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் தேமுதிக எம்எல்ஏக்கள் சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி மக்கள் நலனுக்காக முதல்வரை சந்தித்து பேச, விஜயகாந்திடம் அனுமதி கேட்டோம். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். அதையும் மீறி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து எங்கள் தொகுதி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்து தருமாறு கேட்டுள்ளோம். முதல்வரும் ஆவன செய்வதாக கூறியுள்ளார். கட்சியை விட்டு செல்வதாக இருந்தால், முறைப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என்று எங்களை பற்றி தேமுதிக கொறடா சந்திரகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வரும் போது, முறையாக சொல்லிவிட்டு, அனைத்தையும் ஒப்படைத்துவிட்டுதான் வந்தாரோ?
விஜயகாந்தால் எங்களுக்கு எம்எல்ஏ பதவி கிடைத்ததாக கூறுகிறார்கள். நாங்கள் இப்போதே ராஜினாமா செய்ய தயார். மற்ற தேமுதிக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு, தேர்தலை சந்திக்க தயாரா? நாங்கள் முதல்வரை சந்தித்த பின்பு, எங்களுக்கு கொலை மிரட்டல் வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் சந்தித்தது நாடகம் என்றால், நீங்கள் முதல்வரை சந்திக்க அனுமதி கேட்பது கபட நாடகமா? மேலும், 10 தேமுதிக எம்எல்ஏக்கள் முதல்வரை சந்திக்க காத்திருப்பதாக சொல்வது பற்றி எங்களுக்கு தெரியாது. தைரியமும், திராணியும் இருந்தால் எங்களை கட்சியை விட்டு விஜயகாந்த் நீக்கி பார்க்கட்டும். இவ்வாறு சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன் ஆகியோர் கூறினர்.

No comments:

Post a Comment