Tuesday, October 30, 2012

மனித உரிமை மீறல் குறித்து பொறுப்புக் கூறும்படி இலங்கையை வலியுறுத்துமாறு ஐ.நா உறுப்பு நாடுகளிடம் மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது!

Tuesday, October 30, 2012
இலங்கை::மனித உரிமை மீறல் குறித்து பொறுப்புக் கூறும்படி இலங்கையை வலியுறுத்துமாறு ஐ.நா உறுப்பு நாடுகளிடம் மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நாவில் நவம்பர் 1ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை மனித உரிமைகள் தொடர்பான ஆய்வில் இது குறித்து ஐ.நா உறுப்பு நாடுகள் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் இன்று (30) தெரிவித்துள்ளது.

சர்வதேச கடமை, கருத்து சுதந்திரம், சமூக நிறுவனங்கள் மீதான தாக்குதல் மற்றும் ஊடகங்கள் மீதான அடக்குறை என்பன குறித்து இலங்கைக்கு ஐ.நா உறுப்பு நாடுகள் நினைவுபடுத்த வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட வேண்டும் என்பதோடு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும் முன்வர வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய வலய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் கூறியுள்ளார்.

யுத்தம் நடந்த போது இரு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்ந்து சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை தவறியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2008ம் ஆண்டு பரிந்துரைகளின்படி கொலை, குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்ததாக இலங்கை கூறுகின்ற போதும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை உறுதியளித்தது.

எனினும் இலங்கையில் தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைக்கும் சிரேஸ்ட அதிகாரிகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மிரட்டல், அச்சுறுத்தல் விடுப்பவர்களை கண்டுபிடிக்கவும் அரசாங்கம் தவறியுள்ளதென மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

No comments:

Post a Comment