Monday, October 01, 2012
மண்டபம்: ராமநாதபுரம் அருகே சொத்து தகராறு காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேர் இன்று அதிகாலை உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். வீட்டை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாகாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட தோப்பு வலசை என்ற கடற்கரை கிராமம் உள்ளது. இங்கு வசிப்பவர் கள்ளழகர். மனைவி காளிமுத்து (32). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள். கள்ளழகர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். காளிமுத்து, குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். அவர்களுடன் காளிமுத்துவின் அப்பா கருப்பையாவும் (62) தங்கியிருந்தார்.
தோப்பு வலசையில் கள்ளழகருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில்தான் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த வீடு தொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த ராயர் என்பவருக்கும் கள்ளழகருக்கும் பிரச்னை ஏற்பட்டது. ஓராண்டுக்கு முன்பு இருவரும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அது விசாரணையில் இருந்து வருகிறது. ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது. இதற்கிடையே, வீட்டை காலி செய்யும்படி காளிமுத்துவை ராயர் உள்பட 4 பேர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. வீடு தொடர்பாக விசாரணை நடப்பதால், அதில் முடிவு ஏற்பட்ட பிறகே வீட்டை காலி செய்வோம் என கள்ளழகர் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால், அவர்கள் மீது ராயர் கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில், கருப்பையா, காளிமுத்து, குழந்தைகள் காவேரி, சரண்யா, பாலமுருகன், சக்தீஸ்வரன் ஆகியோர் நேற்றிரவு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை அங்கு வந்த ஒரு கும்பல், வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு, குடிசைக்கு தீ வைத்துள்ளது. காற்று வேகமாக வீசியதால் குடிசை முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தூங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் அலறினர். சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் எழுந்து ஓடிவந்தனர். போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் குடிசை முழுவதும் எரிந்து நாசமானது. தீயில் சிக்கிய கருப்பையா, காளிமுத்து மற்றும் 4 குழந்தைகளும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் டிஐஜி ராமசுப்பிரமணியம், ராமநாதபுரம் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, பலியான 6 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயில் கருகிய குழந்தைகள் 12 வயது முதல் 4 வயதுக்கு உட்பட்டவர்கள். உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சொத்து தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment