Friday, September 28, 2012
சென்னை:: சத்தியமூர்த்திபவனில் நடந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தலில் கள்ள ஓட்டு புகாரை தொடர்ந்து தகராறு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் 5 மண்டலங்களில் நேற்று நடந்தது. இன்றும் தொடர்ந்து நடக்கிறது. இது சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி மற்றும் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல். பூத் கமிட்டி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வாக்களிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தலா 3 ஓட்டு போடுவார்கள்.
சென்னை மண்டலத்துக்கான தேர்தல் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மத்திய சென்னை மற்றும் வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கும், அண்ணாநகர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆர்கேநகர், திருவொற்றியூர், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணி வரை நடைபெற்றது. இந்த தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். உரிய ஆவணங்கள் வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இந்நிலையில், வாக்குப்பதிவின் போது சிலர் கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி வில்லிவாக்கம் சுரேஷ், பெரம்பூர் நிசார் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர் தருண் தியாகியிடம் புகார் செய்ததோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கள்ள ஓட்டு போடப்பட்டு இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி உறுதி அளித்ததை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.
இதை தொடர்ந்து, கள்ள ஓட்டு தொடர்பாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சத்தியமூர்த்திபவனில் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று நடந்த தேர்தலில் மொத்த ஓட்டுகள் 733. இதில் 92 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மண்டலத்துக்குட்பட்ட தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி மற்றும் 12 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது.
No comments:
Post a Comment