Wednesday, August 22, 2012

ஊடகப் போரில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது – ரொஹான் குணரட்ன!

Wednesday, August 22, 2012
இலங்கை::ஊடகப் போரில் அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

யுத்த கலத்தில் இடம்பெற்ற மோதல்களில் அரசாங்கம் வெற்றியீட்டிய போதிலும், ஊடக யுத்தத்தில் தோல்வியைத் தழுவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ஆதரவினை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் திமுக தலைவர் கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் பலவீனமடையும் சந்தர்ப்பங்களில் இவ்வாறு இன அல்லது மத ஆயுதத்தை பயன்படுத்தி மக்களின் ஆதரவை திரட்ட முனைப்பு காட்டுவது இயல்பான நிலைமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தில் வாழும் தமிழர்கள் புலி உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேண விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தமிழீழத்தை அமைக்கும் நோக்கில் ஒரு சிலர் மட்டும் முயற்சி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

எம்.ஜீ. ராமசந்திரன் மற்றும் கருணாநிதி போன்றோரே இலங்கையில் பயங்கரவாதத்தை விதைதனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் வலுவான சிறந்த ஆற்றல் மிக்க ஒருவரை தமிழகத்திற்கான தூதுவராக நியமிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழகத்துடனும், இந்தியாவுடனும் சிறந்த உறவு பேணப்பட்டதாகவும், இதே போன்றதொரு உறவு மீளவும் ஆரம்பிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களுடன் உறவுகளைப் பேணுவதற்காக வெளிவிவகார அமைச்சு தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

லண்டனுக்கோ, வாஷிங்டனுக்கோ சிறந்த இராஜதந்திரியை அனுப்புவதனை விடவும் சென்னைக்கு சிறந்த தூதுவரை அனுப்பி வைப்பது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க காவல்துறையினரும் ஏனைய படையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற போதிலும் புலிகளின் போலிப் பிரச்சாரங்கள் மற்றும் பிழையான தகவல் வெளியீட்டை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட நாட்டின் முக்கியஸ்தர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் புலிகளுக்கு எதிரான ஊடக் போரில் தோல்வியடைந்துள்ள நிலைமையே இவ்வாறான போராட்டங்களுக்கான பிரதான ஏதுவென ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment