Wednesday, August 29, 2012

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு தூக்கு உறுதி : பரபரப்பு தீர்ப்பு!!

Wednesday, August 29, 2012
மும்பை::மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாபுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதி செய்தது.
கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினர். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், காமா மருத்துவமனை, நாரிமன் ஹவுஸ், தாஜ் ஓட்டல், டிரைடன்ட் ஓட்டல் உள்ளிட்ட 8 இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டவர், போலீசார் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் முகமது அஜ்மல் கசாப் என்பவன் தவிர மற்ற அனைவரையும் கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனர். உயிருடன் பிடிபட்ட கசாப் மீது கொலை, கொலை முயற்சி, கொலை சதி, நாடு புகுந்து தாக்குதல், வெடிபொருள் தடை சட்டம், பாஸ்போர்ட் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மும்பையில் ஆர்தர் ரோடு சிறை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு மே மாதம் கசாபுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் மும்பை உயர் நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது.
தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கசாப் அப்பீல் செய்தான். அவனுக்கு ஆதரவாக வாதாட மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரனை நீதிமன்றம் நியமித்தது. கசாபின் அப்பீல் மனுவை நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த விசாரணையின்போது, அரசு தரப்பு வக்க¦லும் எதிர் தரப்பு வக்கீலும் தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து கசாப் அப்பீல் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைப்பதாக ஏப்ரல் 25ம் தேதி நீதிபதிகள் அறிவித்தனர். இந்த நிலையில் கசாப் அப்பீல் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. கசாப்பின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment