Friday, August 24, 2012

மோசடியில் ஈடுபட்டு வந்த நபரின் சமாதான நீதவான் பதவி இரத்து – ஏராளமான முறைப்பாடையடுத்து நீதியமைச்சர் ஹக்கீம் நடவடிக்கை!

Friday, August 24, 2012
இலங்கை::சமாதான நீதவான்களின் மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில் சமாதான நீதவான்களையும், பொது மக்களையும் சூறையாடி மோசடி செய்யும் ஒருவருக்கு எதிராக நீதிமையச்சர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி, நய்னமடம 205 ஆம் இலக்க வசிப்பிடத்தையும், வென்னப்புவ, கலாநிதி சங்கைக்குரிய ரெக்ஸ் டயஸ் மாவத்தையில் அலுவலகத்தையும் கொண்ட டி.எஸ். ஜயந்த களுபோவில என்ற நபரின் சமாதான நீதவான் பதவியை இரத்துச் செய்யுமாறு நீதியமைச்சர் ஹக்கீம் பணித்துள்ளார்.

இந்த நபர் சமாதான நீதவான்களின் மனித உரிமைகள் அமைப்பு என்ற ஒன்றை நிறுவி அதனூடாக சமாதான நீதவான்களிடம் அங்கத்துவப் பணம் அறவிட்டு வருவதோடு, பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்துள்ளதாக நீதியமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் அநேக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக, நீதியமைச்சு நடாத்திய விசாரணைகளையடுத்து ஜயந்த களுபோவில என்பவருக்கு 1992 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 92/02/NW/WI/F/01 என்ற பதிவிலக்கத்தையுடைய தீவு முழுவதற்குமான சமாதான நீதவான் பதவியை இரத்துச் செய்வதற்கு நீதியமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்துடன், இந்த நபர் அவரது அமைப்பினூடாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் சமாதான நீதவான்களுக்கு மேலும் உயர் பதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கும், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான வீசாக்களை பெற்றுக்கொடுப்பதற்குமாக அவ்வப்போது முறைகேடாக பணம் அறிவிட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

மாரவில நீதவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக தொடரப்பட்ட பண மோசடி வழக்கில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், திருகோணமலை, கண்டி, களுத்துறை உட்பட 22 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நபரால் மோசடிக்கு ஆளாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஜயந்த களுபோவில என்ற இந்த நபராலும், அவரால் நடாத்தப்பட்ட சமாதான நீதவான்களின் மனித உரிமைகள் அமைப்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளை தொடர்ந்தும் நீதியமைச்சுக்கு தெரிவிக்க முடியும்.

No comments:

Post a Comment