Friday, August 24, 2012

அரக்கோணம் அருகே இன்று தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கியது பஸ்!

Friday, August 24, 2012
அரக்கோணம்::அரக்கோணம் அருகே இன்று அதிகாலை மேம்பால தடுப்பு சுவரில் மோதிய அரசு பஸ் அந்தரத்தில் தொங்கியது. டிரைவர் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். திருவள்ளூரில் இருந்து அரக்கோணத்துக்கு இன்று அதிகாலை அரசு பஸ் ஒன்று வந்தது. பஸ்சை சத்தியமூர்த்தி(45) ஓட்டி வந்தார். கண்டக்டராக திருவள்ளூர் அரேராம் நகரை சேர்ந்த சங்கர் இருந்தார். தக்கோலம் அடுத்த விண்டர்பேட்டை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் 5.55 மணிக்கு பஸ் வந்தது. அப்போது எதிரே பானுசேகர் என்பவர் பைக்கில் வந்தார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை இடதுபக்கமாக திருப்பியுள்ளார். டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மேம்பால தடுப்புச்சுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. அருகே 25 அடி பள்ளம் இருந்தது. பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் சத்தியமூர்த்தி, சங்கர், பைக்கில் வந்த பானுசேகர் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் 108ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் சத்தியமூர்த்தி, பானுசேகர் ஆகியோர் சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த விபத்தால் அந்தப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment