Wednesday, August 22, 2012

நடிகர் கார்த்திக் கைதானதாக வதந்தி திருமண மண்டபம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Wednesday, August 22, 2012
சிவகாசி::நடிகர் கார்த்திக் கைது செய்யப்பட்டதாக வதந்தி பரவியதால் சிவகாசியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சிறுகுளம் பகுதியில் உள்ள பெரியார் நகர், திருநகர் பகுதியில் கண்மாயின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அகற்றும் பணி, கடந்த 18ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கணேசன் (40), வீட்டின் மாடியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. பதற்றத்தை தணிக்க போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக், கணேசன் குடும்பத்துக்கு ஆறுதல் கூற நேற்றிரவு சிவகாசி வருவதாக இருந்தது.

அவருக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், அவர் மதுரையிலேயே தங்கி விட்டார். கார்த்திக் வருகையை எதிர்பார்த்து, சிவகாசி எஸ்எப்ஆர் கல்லூரி முன்பு அவரது கட்சித் தொண்டர்கள் நேற்றிரவு திரண்டிருந்தனர். அப்போது கார்த்திக்கை போலீசார் கைது செய்து விட்டதாக வதந்தி பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பிக்கள் சக்திவேல், முருகேசன், சின்னையா தலைமையில் போலீசார் வந்து, கார்த்திக்கை யாரும் கைது செய்யவில்லை என்று கூறி அனுப்பினர். இதற்கிடையே, சிவகாசி விருதுநகர் ரோட்டில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடினர். மண்டபத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment