Wednesday, August 29, 2012

தமிழீழம் என்ற தனிநாட்டை இலங்கைக்குள் உருவாக்குவதற்கும் நாட்டைப் பிரிப்பதற்கும் தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் - ஐக்கிய தேசியக் கட்சி!

Wednesday, August 29, 2012
இலங்கை::தமிழீழம் என்ற தனிநாட்டை இலங்கைக்குள் உருவாக்குவதற்கும், நாட்டைப் பிரிப்பதற்கும் தாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் செயற்படுபவர்களையும் தாம் கடுமையாக எதிர்க்கின்றோம் எனவும் அது தெரிவித்தது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற 'டெசோ' மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்துகொண்ட நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவை ஐ.தே.க. பொது எதிரணிக்குள் இணைத்துக்கொண்டு செயற்படுகின்றது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் ஐ.தே.கவின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பதிலளிக்கையில்

எமது கட்சியின் கொள்கைகளும், நவசமசமாஜக் கட்சியின் கொள்கைகளும் வௌ;வேறானதாகும். பொது எதிரணியில் இணைந்திருப்பதால் எமது கட்சியின் கொள்கைக்கமைய செயற்பட வேண்டுமென நாம் நவசமசமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவிடம் கூறமுடியாது. அதேபோல், அவரது கட்சியின் கொள்கைகளுக்கமைய நாம் செயற்பட வேண்டுமென அவர் எம்மிடம் கூறமுடியாது. நாம் பொது எதிரணியில் இணைந்திருந்தாலும் எமது கட்சியின் கொள்கைகள் வௌ;வேறே.

அவரவர் கட்சியின் கொள்கைகளுக்கு அமையத்தான் அவரவர் செயற்பட வேண்டும். கட்சி ரீதியில் நாம் வேறுபட்டிருந்தாலும் பொது எதிரணியினர் என்ற வகையில் இந்த அரசை ஆட்சியிலிருந்து விரட்டவேண்டும் என்பதே எமது நோக்கம். அதனடிப்படையிலேயே நாம் பொது எதிரணியினர் என்ற வகையில் செயற்படுகின்றோம்.

நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம். அத்துடன், தனித் தமிழீழம் என்ற நாட்டை இலங்கைக்குள் உருவாக்குவதற்கும் நாம் இடமளிக்க மாட்டோம்.

ஜாதிக ஹெல உறுமயவிற்கும், அரசுக்குமிடையில் பல பிரச்சினைகள் உள்ளன. முதலில் அவற்றைத் தீர்ப்பதற்கு அது வழிசெய்ய வேண்டும். அதைவிடுத்து, எம்மைப்பற்றி விமர்சிக்கக் கூடாது என அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment