Tuesday, August 21, 2012

2023.. செவ்வாய் கிரகத்தில் இறங்குது முதல் டீம்.. வீடு கட்டி குடியிருக்கும் சூப்பர் திட்டம்..!!

Tuesday, August 21, 2012
ஆம்ஸ்டர்டாம்::பூமி போலவே செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைக்கும் ஆய்வில் ஹாலந்து விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். 2023-ல் முதல் டீம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 1600களில் நவீன தொலைநோக்கிகள் வரத் தொடங்கிய காலத்திலேயே செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சியும் ஆரம்பித்துவிட்டது. 1960-களில் தொடங்கி இதுவரை ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் என சுமார் 40-க்கும் அதிகமான விண்கலங்கள் செவ்வாய்க்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையம் கடந்த நவம்பர் 26-ம் தேதி அனுப்பிய ‘கியூரியாசிடி’ ரோவர் வாகனம் 7 மாத பயணத்துக்கு பிறகு கடந்த 6-ம் தேதி பத்திரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு பணியை தொடங்கியிருக்கிறது. செவ்வாய்க்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும் விரைவில் விண்கலம் அனுப்ப உள்ளது.
இந்நிலையில், இன்னும் ஒரு படி மேலே சென்று, செவ்வாயில் குடியிருப்புகள் அமைக்கும் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறது ஹாலந்து விஞ்ஞானிகள் டீம். இளம் விஞ்ஞானி பாஸ் லேண்ஸ்டார்ப், அர்னோ வீல்டர்ஸ், பிரையன் வெர்ஸ்டீக், சூசன் பிலிகன்ஃபோகல் ஆகியோர் இணைந்து இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாயில் நிரந்தர குடியிருப்பு (காலனி) உருவாக்குவது. பூமியில் இருந்து முதல் டீமை 2023-ம் ஆண்டில் செவ்வாயில் தரையிறக்குவது.. இதுதான் அவர்களது சூப்பர் திட்டம். பல கட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த இலக்கை எட்ட இருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக இதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்து திட்டத்தை இறுதி செய்து கடந்த ஜூனில் வெளியிட்டனர். அதன்படி, முதல்கட்டமாக 40 விண்வெளி வீரர்கள் 2013-ல் (அடுத்த ஆண்டு) தேர்வு செய்யப்படுவார்கள். செவ்வாய் கிரகம் பழக்கமில்லாத ஏரியா என்பதால் அவர்களுக்கு பயிற்சி தேவை. அதற்காக செவ்வாய் போன்ற சூழலுடன் பிரமாண்ட செட்டிங் பாலைவன பகுதியில் அமைக்கப்பட்டு அங்கு பயிற்சி அளிக்கப்படும். பூமியுடனான நிரந்த தகவல் தொடர்புக்காக 2014-ல் பிரத்யேக செயற்கைக்கோள் உருவாக்கப்படும். மனிதர்கள் உயிர் வாழ தேவையான, எந்த சூழ்நிலையிலும் கெட்டுப் போகாத உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சுமார் 2500 கிலோ அளவுக்கு பார்சல் செய்யப்பட்டு 2016-ம் ஆண்டு ஜனவரியில் விண்கலத்தில் வைத்து அனுப்பப்படும். அக்டோபரில் அது செவ்வாயை சென்றடையும்.

செவ்வாயில் வசிக்க ஏற்ற இடம் எது என்று கண்டுபிடிக்க ரோவர் வாகனம் 2018-ல் அனுப்பப்படும். அது பல இடங்களுக்கும் சுற்றி வீடியோ காட்சிகளை பூமிக்கு அனுப்பும். மனிதன் வசிக்க 2 வீடுகள், அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய 2 குடோன்கள், ரோவர் வாகனங்கள் அனைத்தும் அதனதன் இடத்தில் 2021-ல் நிலைநிறுத்தப்படும். செவ்வாயிலும் வளிமண்டலம் உண்டு. ஆனால், கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு அதிகம் (95.32%). அதைக் கொண்டு நீர், ஆக்சிஜன் தயாரிப்பது போன்ற பணிகள் 2022-ல் நடக்கும். அந்த வேலைகள் முடிந்த பிறகு, 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி 4 வீரர்கள் கொண்ட முதல் டீம் செவ்வாய் கிரகத்துக்கு புறப்படும். 2023-ல் செவ்வாய் சென்றடையும் அவர்கள், செவ்வாய் கிரகத்தில் முதலில் காலடி பதிக்கும் மனிதர்கள் என்ற பெருமையை பெறுவார்கள். அங்கேயே தங்கி ஆய்வு பணிகளை அவர்கள் தொடங்குவார்கள். மனிதர்கள் வாழ ஏற்ற யூனிட்களை மேலும் அமைப்பது, இதர அத்தியாவசிய கட்டுமானங்கள் அமைப்பது போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபடுவார்கள். 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் 2-வது டீம் செவ்வாயில் இறங்கும். இப்படி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்புது டீம் போய்க்கொண்டே இருக்கும். 2033-க்குள் குறைந்தபட்சம் 20 பேராவது இருப்பார்கள்.

ஒரு விஷயம்.. போய்ச் சேருவதற்கே செலவு எக்குத்தப்பாக ஆகும் என்பதால், போய் இறங்கியதும் ‘அப்பாவை பாக்கணும்.. ஆட்டுக்குட்டிய பாக்கணும்’ என்று பூமிக்கு திரும்ப முடியாது. போனால், போனதுதான். இது ‘ஒன்வே பயணம்’ என்பதை உறுதிபட தெரிவித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள். கடைசி வரை அங்கேயே வாழ்ந்து அங்கேயே ‘செட்டில்’ ஆகவேண்டியதுதான்.
இதுதான் ஹாலந்து விஞ்ஞானிகள் போட்டிருக்கும் சூப்பர் பிளான். தகவலே கிடுகிடுக்க வைக்கும்போது, செயலில் இறங்குவது சாமானியமா? முதல் டீமை அனுப்பிவைக்க மட்டும் ரூ.33 ஆயிரம் கோடி செலவாகும் என்று பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். நல்ல ஸ்பான்சரையும் தேடி வருகின்றனர்.

செவ்வாயை குறிவைக்க என்ன அவசியம்?

சூரியனுக்கு வெகு அருகில் உள்ளது புதன். 2-வதாக வெள்ளி. 3-வது இடத்தில் பூமி. 4-வது இடத்தில் செவ்வாய். சூரியனுக்கு நெருங்கிய கோள்களில் வெப்பம் பொசுக்கிவிடும் அளவு இருக்கும். தொலைவுக்கு செல்லச் செல்ல வெப்பம் குறையும். உயிரினங்கள் தாக்குபிடிக்க முடியாத அளவுக்கு குளிர் இருக்கும். மீடியம் வெப்பநிலை நிலவுவதால்தான் பூமியில் உயிரினங்கள் வாழ்கின்றன. பூமிக்கு பக்கத்தில் இருக்கும் கோள் என்பதால் செவ்வாயிலும் உயிரினங்கள் உயிர்வாழக்கூடிய சாத்தியக்கூறு அதிகம். நிஜமாகவே உயிர் வாழ முடியுமா என்று தெரிந்து கொள்வதுதான் இந்த ஆராய்ச்சிகளின் முக்கிய நோக்கம்.

செவ்வாய் யாருக்கு சொந்தம்?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில நிறுவனங்கள் நிலாவிலும் மற்ற கிரகங்களிலும் ‘நிலம் விற்பனைக்கு’ என விளம்பரம் வெளியிட்டு பணம் வசூலிக்கிறார்கள். நிலத்தை ‘ரிஜிஸ்டர்’ செய்து பத்திரம் கொடுக்கிறார்கள். இது சும்மா பம்மாத்து. விண்வெளி என்பது ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் சொந்தமானது. எந்த கிரகத்துக்கோ, வேறு பொருட்களுக்கோ தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று ஐ.நா.வின் 1967-ம் ஆண்டு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சொந்தக் காசு செலவு செய்து செவ்வாய்க்கு போனால், நம் இஷ்டப்படி குடிசை போடலாம். ஒரு பயல் கேள்வி கேட்க முடியாது.

என்னவெல்லாம் நடக்கும்?

2030-களின் துவக்கத்தில் பூமியில் இருந்து செவ்வாய்க்கு மக்கள் ‘ஏற்றுமதி’ செய்யப்படுவார்கள். நாளாவட்டத்தில் அங்கேயே ‘உற்பத்தி’ தொடங்கும். ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளும் ரோடு, குடிநீர் (தண்ணீரை குடிப்பார்களா, தின்பார்களா தெரியவில்லை) பிற அடிப்படை வசதிகளும் அமைக்கப்படும். அண்டை மாநிலம், அண்டை நாடு போல ‘அண்டை கிரகம்’ என்ற வகையில் பூமியில் இருந்து நிதியுதவிகள் அளிக்கப்படும். அல்லது, அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும். வெப்கேமரா போன்றவை உதவியுடன் பூமி - செவ்வாய்வாழ் மக்கள் பேசிக்கொள்ளலாம். இரு கோள் இடையே சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும். சம்மர் லீவுக்கு செவ்வாயில் இருக்கும் அத்தை, மாமா வீட்டுக்குகூட பூமிப்பசங்க போகலாம்.

வாழ முடியுமா?

சூரியன்-பூமி இடைவெளியைவிட சூரியன்-செவ்வாய் இடைவெளி ஒன்றரை மடங்கு அதிகம். அதனால், பூமி போல சூரிய வெளிச்சம் ‘சுள்’ளென்று அடிக்காது. கூலிங் கிளாஸ் போட்டது போல சற்று மிதமாகத்தான் இருக்கும். செவ்வாயில் வளிமண்டல அழுத்தம் குறைவு என்பதால் தண்ணீர் என்பது அங்கு திரவமாக இருக்க வாய்ப்பு கிடையாது. அதே நேரம், செவ்வாயின் தென்துருவ பகுதி முழுவதும் ஐஸ்கட்டியாக இருப்பதாக கூறப்படுகிறது. அது உருகினால் மொத்த செவ்வாய் கிரகமும் வெள்ளக்காடாக மாறி 33 அடி உயரத்துக்கு தண்ணீர் நிற்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஐஸ் வடிவில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை மார்ஸ் எக்ஸ்பிரஸ், ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர், பீனிக்ஸ் விண்கலங்கள் ஆகியவை ஏற்கனவே உறுதி செய்துள்ளன. ஒரு காலத்தில், மனிதர்கள் வாழ மிகமிக ஏற்ற இடமாக- இப்போதைய நிலையைவிட நன்றாகவே செவ்வாய் இருந்திருக்கிறது. ஆனால், அந்த காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒருவேளை வாழ்ந்திருந்தால், இப்போதும் செவ்வாயில் வாழ முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

No comments:

Post a Comment