Thursday, August 23, 2012

வங்கி ஊழியர்கள் 2வது நாளாக ஸ்டிரைக் : ஏடிஎம் சேவையும் கடும் பாதிப்பு!

Thursday, August 23, 2012
சென்னை::வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கால் தமிழகம் முழுவதும் 25 லட்சம் காசோலைகள் முடங்கியதால், ரூ.500 கோடிக்கு பரிவர்த்தனை நடக்கவில்லை. ஆயிரக்கணக்கான ஏடிஎம்களில் பணம் காலியானதால், ஏடிஎம் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்பட 9 சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள், அலுவலர்கள் என மொத்தம் 10 லட்சம் பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாடு முழுவதும் 80 ஆயிரம் வங்கி கிளைகள் முடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் 7,200 கிளைகளில் பணிபுரியும் 72 ஆயிரம் பேரும், சென்னையில் 1,400 கிளைகளில் பணிபுரியும் 11 ஆயிரம் பேரும் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் இன்று 2வது நாளாக நீடித்தது. இதனால், வங்கி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையில் வங்கிகள் அதிகமாக காணப்படும் பிராட்வே உள்ளிட்ட இடங்கள் ஸ்டிரைக்கால் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான வங்கிகளின் முன்பாக ‘வங்கிகள் செயல்படாது’ என்ற அறிவிப்பு பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தன. மேலும், வங்கிகள் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வங்கி ஊழியர்களின் ஸ்டிரைக்கை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் நேற்று இரவு முதலே பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. 7 ஆயிரத்துக்கும் அதிகமான ஏடிஎம்களில் பணம் காலியானதால், இன்று அவை மூடப்பட்டிருந்தன.

போராட்டம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொது செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது: சென்னையில் ஒரு நாளைக்கு 6 லட்சம் காசோலை பரிவர்த்தனைகள் நடைபெறுவது வழக்கம். இதன் மூலம் ரூ.115 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை நடைபெற்றது. 2 நாள் ஸ்டிரைக்கால் 12 லட்சம் வங்கி காசோலை பரிவர்த்தனை முடங்கியுள்ளது. இதன் மூலம் ரூ.250 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. இதே போல, தமிழகம் முழுவதும் 25 லட்சம் காசோலைகள் பரிவர்த்தனை மூலம் ரூ.500 கோடி முடங்கியுள்ளது. எங்கள் போராட்டத்துக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து தலைமை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும்.

No comments:

Post a Comment