Friday, August 24, 2012

கருணாநிதி கூட்டத்தில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க தி.மு.க., நிர்வாகிகளுக்கு உத்தரவு!

Friday, August 24, 2012
சென்னை::"டெசோ' மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் அம்பத்தூரில் இன்று நடக்கிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசும் இக்கூட்டத்திற்கு, 10 ஆயிரம் பேர் பங்கேற்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும் என, கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாக்க, சென்னையில் கடந்த, 12ம் தேதி தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், "டெசோ' மாநாடு நடந்தது. அதில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக, 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை விளக்கும் பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும், 10 நாட்களுக்கு, தி.மு.க., சார்பில் நடைபெறும் என, கருணாநிதி அறிவித்தார். திருவள்ளூர் மாவட்ட, தி.மு.க., சார்பில் அம்பத்தூரில், "டெசோ' மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார். தென்சென்னை, வடசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து, 10 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என, அறிவாலயத்திலிருந்து அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டால் தான், குறைந்த பட்சம் மூன்றில் ஒரு பங்கு என்ற அடிப்படையில், மூன்று ஆயிரம் பேர் பங்கேற்பர் என, அக்கட்சியின் தலைமை கணக்கிட்டுள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்தில், 40 நிமிடம் வரை கருணாநிதி பேசுவார் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். திறந்த வெளி மாநாடு போல், "டெசோ' மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்த, திருநெல்வேலி மாவட்ட, தி.மு.க., முடிவு செய்துள்ளது. வரும் 26ம் தேதி பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசுகிறார்.

No comments:

Post a Comment