Wednesday, June 6, 2012

யுத்த வலயத்திலிருந்து பொதுமக்கள் விடுவிக்கப்படுவதனை புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை - விக்கிலீக்ஸ்!

Wednesday, June, 06, 2012
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் யுத்த வலயத்தை விட்டு வெளியேறுவதனை புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை விடுதலை செய்ய புலம் பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பு அவசியம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க வாழ் புலம்பெயர் தமிழர்களுடன் அந்நாட்டு துணை ராஜாங்கச் செயலாளர் பௌச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

எனினும், பொதுமக்களை விடுவிக்குமாறு புலிகளிடம் கோரும் யோசனையை புலம் பெயர் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் திகதி இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கினால் இந்த தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரின் இலங்கை விஜயம் தொடர்பான தகவல்கள் இந்தக் குறிப்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உரிய சந்தர்ப்பத்தை வழங்கத் தவறினால், சர்வதேச ரீதியில் அழுத்தங்களை எதிர்நோக்க நேரிடும் என ரொபர்ட் ஒ பிளக், இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கான உதவிகள் குறைக்கப்படல், சர்வதேச நாணய நிதிய உதவிகளில் தடைகள், யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த சர்வதேச விசாரணை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க நேரிடலாம் என பிளக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுமக்களை பாதுகாத்தல் மற்றும் புலிகள் சரணடைய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவாஜ் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளினால் பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் இழப்புக்கள் குறித்து இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியத் தூதுவரும் அறிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடும்போக்குடைய கொள்கைகளை பின்பற்றி வருவதாக பிளக் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலை இலக்கு வைத்தே ஜனாதிபதி யுத்த நிறுத்தத்திற்கு உடன்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் வெற்றியை நெருங்கிவிட்டார்கள் என்பதனை உணர்த்தும் நோக்கில் ஜனாதிபதி கிளிநொச்சிக்கு திடீர் விஜயம் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்வதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவித்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் இழப்பு மற்றும் யுத்த வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டல் தொடர்பில் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், வெளிநாட்டு ராஜதந்திரிகள், இலங்கை அரசாங்க உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் இந்த குறிப்பினை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment