Wednesday, June 6, 2012

தே.மு.தி.க.,வுக்கு மறைமுக ஆதரவும் இனி இல்லை: பிரேமலதா பிரசாரத்தால் தி.மு.க.,வினர் அதிருப்தி!

Wednesday, June, 06, 2012
சென்னை::தே.மு.தி.க., வேட்பாளருக்கு இனி, மறைமுக ஆதரவு இல்லை; தி.மு.க., தொண்டர்களின் குடும்ப ஓட்டுகளையும் அளிக்கக் கூடாது என, தி.மு.க.,வினர் கைவிரித்து விட்டனர்.

புதுக்கோட்டை தொகுதியில் வரும் 12ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அ.தி.மு.க., தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. தி.மு.க.,விடம் ஆதரவு கேட்கும் முடிவை எடுக்க தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம் வலியுறுத்துவேன் என, மாநில இளைஞரணி செயலர் சுதீஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தி.மு.க.,விடம் ஆதரவு கேட்க விஜயகாந்த் விரும்பவில்லை.

பிரேமலதா பிரசாரம்: இந்நிலையில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, புதுக்கோட்டை தொகுதியில் பிரசாரம் செய்தபோது, "சங்கரன்கோவிலில் தி.மு.க., டெபாசிட் இழந்து விட்டது. அந்த பயத்தில் தான், புதுக்கோட்டையில் போட்டியிட தி.மு.க.,வுக்கு திராணி இல்லை; முதுகெலும்பு இல்லை. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் ஊழல் கட்சிகள்' என குறிப்பிட்டுள்ளார்.

திராணியுள்ள கட்சி: "புதுக்கோட்டை தொகுதியில், திராணியுள்ள கட்சி தே.மு.தி.க., போட்டியிடுகிறது' போன்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதும், பிரேமலதாவின் பேச்சும், தே.மு.தி.க., வினரின் செயல்பாடுகளும், தி.மு.க.,வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. தே.மு.தி.க., வேட்பாளருக்கு, தி.மு.க., தொண்டர் குடும்பங்களின் ஓட்டுகளும், தி.மு.க., அனுதாபிகளின் ஓட்டுகளும் மறைமுகமாக விழக் கூடாது. தே.மு.தி.க.,வுக்கு ஆதரவாக பூத் பணிகளிலும் ஈடுபடக் கூடாது. கட்சியின் தலைமை அறிவித்த தேர்தல் புறக்கணிப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் என, தி.மு.க.,வினர் முடிவெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment