Friday, June 1, 2012

புதிய ராணுவ தலைமை தளபதியாக பிக்ரம்சிங் பதவி ஏற்பு!

Friday, June, 01, 2012
புதுடெல்லி::ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய ராணுவ தலைமை தளபதியாக பிக்ரம்சிங் நேற்று பதவியேற்றுக்கொண்டார். பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் ஓய்வுபெற்றார். அவருக்கு பதிலாக புதிய ராணுவ தலைமை தளபதியாக 59 வயதான பிக்ரம் சிங் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இவர் நாட்டின் 25-வது ராணுவ தலைமை தளபதி ஆவார். இவர் இதற்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள கிழக்கு மண்டல தளபதியாக இருந்தவர். இவர் ராணுவத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். பிக்கி என்று ராணுவத்தினரால் செல்லமாக அழைக்கப்பட்டுவரும் இவர், 1972ஆம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி ராணுவத்தில் சேர்ந்தார். இவர் பல்வேறு பதக்கங்களையும் பெற்றவர். இவர் ராணுவ கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, கமாண்டோ டேகர், சிறந்த தந்திரி போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார். பெல்காமில் உள்ள ராணுவ காலாட்படை கல்லூரியில் பயிற்சியாளராகவும் இவர் பணியாற்றி இருக்கிறார். இவர் அமெரிக்க ராணுவ போர் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். மேலும் ஐ.நா. அமைதிப் படையிலும் இவர் பணியாற்றி இருக்கிறார். இவருக்கு சுர்ஜித் கவுர் என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். டெல்லி ராணுவ தலைமையகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவர் நாட்டின் 25-வது ராணுவ தலைமை தளபதியாக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவரிடம் ஓய்வு பெற்றுச்செல்லும் வி.கே.சிங் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

No comments:

Post a Comment