Thursday, June 7, 2012

இஸ்லாமியர் அதிகம் உள்ள ஏரியாவில் முஸ்லிம் எஸ்ஐ நியமிக்க வேண்டும் : மத்திய அரசு!

Thursday, June 07, 2012
புதுடெல்லி::இஸ்லாமியர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் குறைந்தபட்சம் ஒரு முஸ்லிம் இன்ஸ்பெக்டர் அல்லது எஸ்ஐ நியமிக்கப்பட வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது. இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக கடந்த 2005ம் ஆண்டு நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இது கடந்த 2006ம் ஆண்டு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் இன்ஸ்பெக்டராகவோ அல்லது சப் இன்ஸ்பெக்டராகவோ நியமிக்கப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை பல மாநில அரசுகள் சரியாக அமல்படுத்தவில்லை.

இதை தொடர்ந்து கடந்த வாரம் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதத்தை மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. மாநில தலைமை செயலர்களுக்கு மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் எழுதியுள்ள நினைவூட்டல் கடிதத்தில், ‘மத்திய அரசின் உத்தரவு எந்த நிலையில் இருக்கிறது என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment