Tuesday, June 26, 2012

முல்லைத்தீவு, திருமுறிகண்டி பிரதேசத்தில் மீளக்குடியேற சென்றவர்கள் மீண்டும் மனிக்பாம் முகாமுக்கு திரும்பினர்!

Tuesday, June 26, 2012
இலங்கை::முல்லைத்தீவு, திருமுறிகண்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் மீண்டும் மனிக்பாம் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட 49 குடும்பங்களில், ஒரு பிரிவினரே இவ்வாறு திருப்பி அழைத்துச் செல்லப்பட்டுள்ள்தாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அழைத்து வரப்பட்டு முறிகண்டி பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருந்த இந்தக் குடும்பங்களில் ஒரு தொகுதியினர் அதிகாரிகள் குறிப்பிட்ட காணிகளில் குடியேறுவதற்கு மறுப்பு தெரிவித்து, தமக்குச் சொந்தமான காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.

எனினும் அவர்களிடம் காணிகளுக்குரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், அவர்கள் உரிமை கோரும் காணிகள் அவர்களுடையது என்பதை உறுதி செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், அந்தக் குடும்பங்கள் மீண்டும் மனிக்பாம் முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக பி.பி.சி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், 28 குடும்பங்கள் அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணிக்கு உரிய உரிமையாளர்கள் யார் என்பதை உறுதி செய்வதற்கு மூன்று அல்லது நான்கு வாரங்கள் செல்லும் என்பதால், அந்த நடவடிக்கைகள் நிறைவுபெற்றதன் பின்னர் அவர்கள் மீண்டும் அங்கு குடியமர்ப்படுவார்கள் என மாவட்ட அரசாங்க அதிபரை மேற்கோள் காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment