Thursday, June 7, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக 3,000 போலீசார்

Thursday, June 07, 2012
புதுக்கோட்டை::புதுக்கோட்டை இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக 3,000 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வாக்குப் பதிவின் போது வன்முறை செய்வோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. புதுக்கோட்டை இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக தேமுதிக நேரடியாக மோதுகின்றன. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டமானை ஆதரித்து அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நடிகர், நடிகைகள், பிற கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா நாளை மறுதினம் பிரசாரம் செய்ய உள்ளார். இதேபோல் தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேனை ஆதரித்து 28 எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

கட்சி தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, 3 நாட்களாக ஆதரவு திரட்டினார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சியினரும் தேமுதிகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். விஜயகாந்த் நேற்று முதல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், புதுக்கோட்டையில் விவிஐபிக்கள், தொண்டர்கள், வெளியூர் பிரமுகர்கள் குவிந்திருப்பதால் லாட்ஜ்கள், விடுதிகள் நிரம்பி வழிகின்றன. இதனால் தொகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவிநாசியில் இருந்து வந்த 5 கம்பெனி துணை ராணுவத்தினர், 8 டிஎஸ்பிக்கள், 26 இன்ஸ்பெக்டர்கள், 332 எஸ்ஐக்கள், 2202 போலீசார், ஊர்க்காவல் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் 800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா 9ம் தேதி புதுக்கோட்டை வரவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. முதல்வர் வந்திறங்கும் ஹெலிபேட் பகுதியில், தேர்தல் பார்வையாளர் ஏடிஜிபி ஹேமச்சந்திரன், எஸ்பி சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தொகுதி முழுவதும் தலைவர்கள் குவிந்துள்ளதால் கூடுதலாக மத்திய மண்டலத்தில் பணிபுரியும் 3000 போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் பழநி பட்டாலியனில் இருந்து ஒரு கம்பெனி போலீசாரும், திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த ஒரு கம்பெனி போலீசாரும் இன்று புதுக்கோட்டை வந்தனர். சென்னையில் இருந்து ஒரு கம்பெனி போலீசார் வந்து கொண்டிருக்கின்றனர்.

வரும் 10ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிகிறது. வாக்குப் பதிவின் போது வன்முறையில் ஈடுபட்டாலோ, வாக்களிக்க வருவோரை தடுத்தாலோ அல்லது கட்டாயப்படுத்தி வாக்களிக்க செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாக்குச் சாவடிகளில் வன்முறை ஏற்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment