Friday, June, ,08, 2012மீனம்பாக்கம்::ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 13-ம் தேதி சோனியா காந்தி அறிவிப்பார் என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், 2 நாள் பயணமாக கடந்த 6-ம் தேதி டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து டெல்லியில் இருந்து நள்ளிரவு ஒரு மணிக்கு விமானத்தில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு ஸ்டாலின் அளித்த பேட்டி:
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினீர்களா?
பிரதமரையும், ஐ.மு. கூட்டணி தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து பேசியது மரியாதை நிமித்தமானதுதான். ஜனாதிபதி தேர்தலில் ஐ.மு. கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார் என்பது பரிசீலனையில் உள்ளது. அதுபற்றிய இறுதி முடிவை சோனியா காந்தி, வரும் 13-ம் தேதி அறிவிப்பார்.
திமுக முன்னாள் அமைச்சர்களை அதிமுக அரசு தொடர்ந்து கைது செய்து வருகிறதே?
அதிமுக அரசு பழிவாங்கும் போக்கில் பொய் வழக்கு போட்டு இதுபோன்ற கைது நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இதைக் கண்டித்து ஏற்கனவே திமுக பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. அடுத்தகட்ட போராட்டம் பற்றி திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பார்.
திமுக உள்கட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவீர்களா?
உங்களிடம் உள்ள உள்பூசலை தீர்த்துக் கொண்டு, அதன்பிறகு இந்த கேள்வியை என்னிடம் கேளுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
No comments:
Post a Comment