Monday, May 28, 2012

ஜெகன்மோகன் கைது கண்டித்து ஆந்திராவில் பந்த்!

Monday, ,May, 28, 2012
சித்தூர்::ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், கடப்பா தொகுதி எம்பியுமான ஜெகன்மோகன் ரெட்டியை சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் நேற்றிரவு ஐதராபாத்தில் விசாரணைக்கு பின்னர் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா முழுவதும் இன்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் ஒரு நாள் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சித்தூர் மாவட்டம் முழுவதும் அரசு பணிமனைகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க சித்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் முக்கிய சாலைகளில் குவிக்கப்பட்டனர். ஊர்வலம், ஆர்ப்பாட்டம் செய்தவர்களை ஆங்காங்கே கைது செய்தனர்.

சித்தூர் மாவட்டத்தில் ஜெகன் ஆதரவாளர்கள் 250 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். இன்று காலை ஊர்வலமாக செல்ல முயன்ற மதனப்பள்ளி எம்எல்சி திப்பாரெட்டி உள்பட 80 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலை கழகத்தில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெகனின் அம்மா விஜயலட்சுமி, மனைவி சர்மிளா, தங்கை உள்ளிட்ட குடும்பத்தினர் சிபிஐ அலுவலகம் முன்பு நேற்றிரவு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார், அவர்களை சமாதானம் செய்து ஐதராபாத்தில் உள்ள ஜெகனின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் இவர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஜயலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஜெகன் தான் நிரபராதி என நிரூபித்து வெளியே வருவான். எனது மகன் வரும் வரை எனது உண்ணாவிரதத்தை கைவிடமாட்டேன்’’ என்றார்.

தமிழக பஸ்கள் நிறுத்தம்

வேலூரில் இருந்து சித்தூர், திருப்பதி செல்லும் தமிழக பஸ்கள் அனைத்தும் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன. அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து திருப்பதி செல்லும் தமிழக பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment