Wednesday, May 2, 2012

அனுராதபுரம்-விலச்சி சிவலாப்பிட்டிய பகுதியில் பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு இடையில் இன்று காலை அமைதியின்மை!

Wednesday,May,02,2012
இலங்கை::அனுராதபுரம், விலச்சி, சிவலாப்பிட்டிய பகுதியில் பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு இடையில் இன்று காலை அமைதியின்மை ஏற்பட்டது.

பிரத்தியேக உளவாளிகள் இருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தொல்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தினை சோதனையிடுவதற்குச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

எனினும் பக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் தொல்பொருட்களை அகழ்ந்ததாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து வெளியேறிய போதிலும், பிரதேச மக்கள் இடையூறுகளை ஏற்படுத்தியமையால், மற்றுமொரு குழுவினர் பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தந்து அவர்களை வெளியேற்றினர்.

இதேவேளை இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தின் சட்ட அதிகாரி ரோஹன காரியவசத்திடம் நியூஸ் பெஸ்ட் வினவியது.

நாட்டிலுள்ள எந்வொரு தொல்பொருளைத் தேடும் நடவடிக்கையிலும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியின்றி எவரும் ஈடுபட முடியாது என அவர் இதன்போது குறிப்பிட்டார்.

1940 ஆம் ஆண்டு ஒன்பதாம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் ஆறாவது பிரிவிற்கு அமைய நாட்டிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போது, தொல்பொருள் ஆணையாளர் நாயகத்தின் அனுமதியைப் பெற்றதன் பின்னர், அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழேயே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment