Wednesday, May 2, 2012

13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து பேசவே இல்லை? தி ஐலண்ட்!

Wednesday,May,02,2012
இலங்கை::இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வகை செய்யும் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து மஹிந்த ராஜபக்ஷ எதுவுமே பேசவில்லை என்றும், அதுகுறித்து இந்தியக் குழுவும் எதையும் கேட்கவில்லை என்றும் இலங்கையின் தி ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்துப் பேசப்பட்டதாக சுஷ்மா சுவராஜ் கூறியிருப்பது குழப்பத்தை தருவதாக அமைந்துள்ளது. அப்படியானால் இவர்களில் யார் உண்மை பேசுகிறார்கள், யார் பொய் பேசுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1987-ம் ஆண்டு ஏற்பட்ட இந்தியா-இலங்கை இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனேவும் இதில் கையெழுத்திட்டனர். அதன் பிறகு 13-வது அரசியல் சாசனத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாகாண அரசுகளுக்கு குறிப்பிட்ட அளவு தன்னாட்சி அதிகாரம் அளிப்பதுடன் காவல்துறை, நிலம் போன்றவை தொடர்பான அதிகாரங்களையும் வழங்கியது. ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கு தொடர்ந்து வந்த அரசுகள் மறுத்தன. நிலம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் மீதான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க முடியாது என்று அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் கூறினர். இலங்கையைப் பொருத்தவரை 80 சதவீத நிலம் மத்திய அரசுக்குச் சொந்தமானது. மீதியுள்ள 20 சதவீத நிலம் தனியாருக்குச் சொந்தமானது. மாகாண அரசுகளுக்கு நிலங்கள் மீது எந்த வகையான உரிமையும் கிடையாது.

இந்த சட்டத் திருத்தத்தை இதுவரை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. அதைத்தான் இந்தியா அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து ஐலண்ட் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று இலங்கைக்கு வந்த இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவிடம் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததாக கூறப்படுவதை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

எனினும், அதற்கு மேலும் செய்வதற்கு அதிபர் தயாராக இருக்கிறார் கூறப்பட்டுள்ளது. மேலும், அப்படியொரு உறுதிமொழி கோரப்படவுமில்லை, தரப்படவுமில்லை என்று இலங்கையின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் மீது இந்தியாவால் திணிக்கப்பட்ட ஒன்று என்றுதான் ராஜபக்சே கூறியிருக்கிறாராம். இந்திய எம்.பிக்கள் குழு தன்னைச் சந்தித்தபோது அவர் கூறுகையில், 1987ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சட்டத் திருத்தத்தை அப்போதைய அதிபர் ஜெயவர்த்தனே மீது இந்தியா திணித்தது என்று கூறிய அவர் அதை எப்படி செய்தது இந்தியா என்றும் விளக்கியுள்ளார். இந்த சட்டத் திருத்தத்திற்கு இந்திய வம்சாவளி தமிழர்களின் தலைவரான ஆறுமுகம் தொண்டைமான் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ.

கடந்த மார்ச் 22-ம் தேதி ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, 13-வது திருத்தம் குறித்து உறுதி தரும்படி இலங்கைக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment